Saturday, July 21, 2018

கஜபூசைச் சுந்தர சுவாமிகள் - வரலாற்றுச் சுருக்கம்

#தவத்திரு_கஜபூசைச்_சுந்தர_சுவாமிகள்
வரலாற்றுச்
சுருக்கம்
கோயமுத்தூரையடுத்த #சிரவணபுரம் கௌமார மடாலயத்தின் தவ ஞானியாகவும், பெருங் கவிஞராகவும் விளங்கிய #சிரவையாதீனத்தின் இரண்டாவது குருமகா சன்னிதானங்கள் தவத்திரு. கந்தசாமி சுவாமிகளின் பூர்வாசிரமத்துத் தம்பியாகிய திரு. வேலப்பக் கவுண்டருக்கும் அவருடைய மனைவி திருமதி. சின்னமைக்கும் இரண்டாவது திருக்குமாரராக 29-11-1929 வெள்ளிக்கிழமையன்று கார்த்திகை மாதம் விசாக நட்சத்திரத்தில் நம் குருமகா சன்னிதானங்கள் தவத்திரு. சுந்தர சுவாமிகள் திரு அவதாரம் செய்தார்கள்.
இளமையிலேயே தவத்திரு. கந்தசாமி சுவாமிகளிடம் அடக்கம், அன்பு, பொருமை, பக்தி முதலிய சீரிய குணங்களையும் தமிழ்க்கல்வியையும் பெற்ற நம் சன்னிதானங்கள் தம் தேசிகரின் திருவருட் கருணையை முழுமையாகப் பெற்றார்கள். தவத்திரு. கந்தசாமி சுவாமிகளின் திருமேனி நலிவுற்றிருந்த கடைசி நாட்களில் நம் சன்னிதானங்கள் அவருக்குச் செய்ய வேண்டிய பணி விடைகளை எல்லாம் மிகக் கவனமாகச் செய்து தம் கண்ணைப் போலப் பேணிப் பாதுகாத்தார்கள். நம் சன்னிதானங்களின் குருபக்தி அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நம் சன்னிதானங்கள் 9-2-1964 அன்று #சிரவையாதீனத்தின் மூன்றாவது குருமகா சன்னிதானமாக திருப்பழனி #தண்டாயுதபாணி சன்னிதியில் அருளாட்சி ஏற்றார்கள் என்றாலும் 1948 முதலே கௌமார மடாலயத்தின் நிர்வாகத்தைக் கௌமார மடாலயத்தில் இருந்த மூத்த துறவிகளாகிய தவத்திரு. சபாபதி சுவாமிகள், தவத்திரு. அரங்கமுத்து சுவாமிகள், தவத்திரு. சின்னசாமி சுவாமிகள் ஆகியவர்களின் ஆலோசனையுடன் கவனித்து வந்தார்கள்.
நம் சன்னிதானங்கள் பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்று அக்கல்லூரியிலேயே சில காலம் ஆசிரியராகவும் இருந்தார்கள். நல்ல சொற்பொழிவாற்றும் திறமையும் கவிபுனையும் ஆற்றலும் அவர்களுக்கு இயல்பாகவே அமைந்து விட்டன. அவர்களுடைய பெரியபுராண புலமையைப் பாராட்டாதாரே இல்லை.
நம் சன்னிதானங்கள் நல்ல கவிஞர். தவத்திரு. கந்தசாமி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை எண்களை வண்ணமாகப் பாடியுள்ளார்கள். இவர்களுடைய செய்யுள்கள் ஓசையினிமையும், பொருட்சிறப்பும், எளிமையும் கொண்டவை.
எல்லோரும் தமிழில் இறை வழிபாடுகள் நடக்க வேண்டும் என விரும்பியபோது 24-6-1953 அன்றே திருப்பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க இராமசாமி அடிகளாருடன் இணைந்து தமிழ் அர்ச்சனையைத் தொடங்கி வைத்தார்கள். 1954 இல் கணபதியில் திருமுறைகளைக் கொண்டு திருக்குட நன்னீராட்டு விழாவை நடத்தினார்கள். தமிழக சமய வரலாற்றில் இச்செயல் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியது எனில் மிகையன்று.
நம் சன்னிதானங்களாகிய சுந்தர சுவாமிகள் தலைமையில் நிறைவேறியுள்ள திருப்பணிகளுக்கும் கும்ப நன்னீராட்டிற்கும் கணக்கே இல்லை. கௌமார மடாலயத்தில் #தண்டபாணிக்_கடவுள்_திருக்கோயில் 
முன்மண்டபம், விமானம், மடப்பள்ளி, தெற்குப் பிரகார மண்டபம் ஆகியவற்றைக்கட்டி 1-6-1966 அன்று திருக் குடமுழுக்காட்டினார்கள். 1971 இல் இராசகோபுரம் கட்டப் பெற்றது. 1978 இல் அருள்மிகு கருணாம்பிகையுடனமர் அவினாசிலிங்கேசுவரரின் கற்றளி எழுந்தது. 1982 இல் பாண்டுரங்கர் ஆலயம் தோன்றியது. இந்தத் திருப்பணியில் 1994 இல் சுவர்ணபந்தன மஹா சம்ப்ரோட்சணமும் கனகாபிஷேகமும் நிகழ்ந்தன. தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் புதிய முறையில் கற்றளியாகப் பெருஞ் செலவில் உருவாக்கப் பெற்று 2-9-1985 அன்று திருக்குட முழுக்கு நடைபெற்றது. நம் குருநாதர் செய்வித்த அழகிய சித்திரத் தேர் (1977), வெள்ளித்தேர், வெள்ளி மயில்வாகனம் ஆகியன கலையழகுமிக்க எழிற்படைப்புகள் ஆகும்.
நம் சுவாமிகள் பிற திருத்தலங்களில் மேற்கொண்ட திருப்பணிகளில் திருப்பெருந்துறை, அவிநாசி, வெஞ்சமாக்கூடல் ஆகியன குறிப்பிட்டுக் கூறத்தக்க சிறப்பு பெற்றவையாகும்.
நம் சன்னிதானங்களால் 1957 ஆம் ஆண்டு தவத்திரு. இராமானந்த அடிகளார் உயர் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 1991 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் ஆயிற்று. 
1976 ஆம் ஆண்டு தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் மழலையர் பள்ளி தொடங்கப்பட்டது. தற்பொழுது மெட்ரிக் பள்ளியாக வளர்ந்து 60 ஆசிரியர்களையும் 1500 மாணவச் செல்வங்களையும் பெற்றுச்சீராக வளர்ந்து வருகிறது.

1987 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25, 26, 27, ஆம் தேதிகளில் நம் குருநாதர் உலகநலம் கருதி 108 ஆண் யானைகளைக் கொண்டு செய்த கஜபூசை என்னும் உலகப் பெருவேள்வியின் சிறப்பு தனிநூலாக எழுதப்பட வேண்டியது ஆகும். இதனாலேயே நம் குருநாதர் கஜபூசை சுந்தர சுவாமிகள் என வழங்கப்படுகிறார்கள். இந்த உலகப் பெருவழிபாட்டின் நினைவாக அருட்செல்வர் முனைவர் நா. மகாலிங்கம் அவர்கள் முற்றிலும் பனைமர பொருட்களாலேயே அமைந்த 120 அடி நீளமும் 54 அடி அகலமும் கொண்ட உலகப் பெருவேள்வி மண்டபத்தைத் தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் வளாகத்தில் கட்டிக் கொடுத்துள்ளார்கள்.
1984 ஆம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் நம் சுவாமிகளின் தொடை எலும்பு உடைந்துவிட்டது. அப்போது அவர்காட்டிய மன உறுதியையும் தமக்கே உரிய இயல்பான இன்முகம் மாறாத தன்மையையும் கண்டு மருத்துவர்களே வியப்புற்றனர்.
அடியார்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக அடிக்கடி திருத்தலயாத்திரை, முருக பக்தர்கள் பேரவை அமைப்பு, சொற்பொழிவு ஆற்றுதல் எனப் பலவகையிலும் நம் குருநாதர் இடையறாது பணியாற்றிவந்தார். சமயப் பணியையும் தமிழ்ப் பணியையும் தம் இரு கண்களாகப் போற்றி வளர்த்து வந்த நம் சன்னிதானங்கள் பவ ஆண்டு வைகாசித் திங்கள் 31 ஆம் நாள் வளர்பிறைச் சஷ்டி திதியும் மக நட்சத்திரமும் அமைந்த நாளில் (14-6-1994) பரமசற்குரு நாதரின் திருவடிகளில் ஐக்கியமடைந்தார்கள்.

சிரவணபுரம் கெளமார மடாலயம் அவர்கள் காட்டியருளிய நன்னெறியிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
“அந்தரரும் போற்ற அரும்பணிகள் செய்துயர்ந்த
சுந்தரநல்த் தேசிகரின் செவ்வழியில் –இந்தப்
பறவையினில் மக்களுக்காகப் பாடுபடல் ஒன்றே
சிரவைத் திருமடத்தின் சீர்”.

No comments:

Post a Comment