Wednesday, October 3, 2018

சிரவைக் குமரகுருபரக் கடவுள் வாரப்பதிகம்


கௌமார மடாலயம், சிரவையாதீனத்தின் மூன்றாம் குருமகா சன்னிதானங்கள் தவத்திரு. கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச்செய்த சிரவைக் குமரகுருபரக் கடவுள் வாரப்பதிகம்.



கௌமார மடாலயம் சிரவை தண்டபாணிக் கடவுள் திருக் கோயிலில், ஒவ்வொரு மாதமும் கிருத்திகைத் திருநாளில் உற்சவர் குமரகுருபரக் கடவுளுக்கு திருமஞ்சனம், பேரொளி வழிபாடு முடிந்து குருமூர்த்தமாக திரு வீதி உலாப் புறப்படும் பொழுது அந்தந்த மாதப் பதிகப் பாடலுடன், அன்று என்ன கிழமையோ அதற்குரிய வாராப் பதிகச் செய்யுளும் ஓதுவா மூர்த்திகளால் விண்ணப்பம் செய்யப்படுகிறது...


               கட்டளைக் கலித்துறை
மாஇரு ஞாலம் தனில்வள மாக வதிந்திடவும்,
    சேய் அருள் பெற்ற கவுமாரர் கூட்டத்தில்ச் சேர்ந்திடவும்
நீ அருள் செய்திட வேண்டினன்; உள்ளம் நெகிழும்வண்ணம்
    ஞாயிறு நாளில் வரவேணும் வள்ளிதன் நாயகனே !

அங்கட் பரமன் விழிவழித் தோன்றி, அழல்உதித்த
    செங்கட் கடாவைநல் வாகனம் ஆக்கிச் சிவன்மகிழ
அங்கப் பிரணவ மந்திரம் சொன்ன அருட்குமரா !
    திங்கட் கிழமையில் வந்தெம் துயரினைத் தீர்த்தருளே !

செவ்வாய் உமையவள் கந்தன் எனப்பெயர் செப்பிமகிழ்
    ஒவ்வாப் புகழ்ச்சிர வைத்தலத் துற்றே ஒளிர்குகனே !
இவ்வாழ் வினில்த் துன்பம் எய்தாத வண்ணம் எமைப்புரக்கச்
    செவ்வாய்க் கிழமை தரிசனம் ஈந்தருள் செய்குதியே !

இதம்ஆர் கவிபொழி அண்ணா மலைக்கிளி இன்தமிழ்ப்பா
    விதம்ஆகக் கேட்டு மகிழும் குருபர வேலவனே !
பதவாரம் கொண்ட கவுமாரர் போற்றும் பராபரனே !
    புதவாரம் தன்னில்மெய்க் காட்சிதந் தெம்மைப் புரந்தருளே.

தயாபரன் ஆன சிவன்உமை நாப்பண் தனிச்சிறப்பால்
    வியாபகம் ஆக விளங்கும் குருபர வித்தகனே !
வயாவற நீக்கித் திருவருள்ச் செல்வ வளம்பெறவே
    வியாழக் கிழமையில் வந்தருள் செய்திட வேண்டுதுமே.

வள்ளிக் கொடியுடன் தெய்வானை யம்மன் வயங்குறவே
    புள்ளிக் கலாப மயில்மீது மேவும் எம் புண்ணியனே !
கொள்ளித் தலையின் எறும்பெனும் உள்ளம் குளிர்தரவே
    வெள்ளிக் கிழமை அருட்காட்சி நல்கிட வேண்டுவனே.

கனஉளம் கொண்ட கவுமாரர் போற்றிக் கவின்சிரவைத்
    தனிமடத் தற்புதக் கோயில் விளங்கியல் சண்முகனே !
நனிஉளம் வாடிடும் எம்துயர் மாற்றிட, நன்மயிலில்
    சனிநாளில் வந்து திருவருட் சேவையைச் சாதிக்கவே.

(இந்தப் பதிவு, சிரவைக் கௌமார சபை வெளியிட்ட சுந்தரர் சொற்றமிழ் என்ற நூலில், 223, 224, 225 ஆகிய பக்கங்களிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது)

No comments:

Post a Comment