ஆறு என்ற எண்ணிற்கும் முருகனுக்கும் மிக நெருங்கிய | தொடர்புள்ளது. முருகனது அவதார நிலையின் பொழுது சிவ பெருமானது நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் ஓராறு. அத்தீப்பொறிகளைத் தாங்கிய தாமரைகள் ஓராறு. தாமரையிலிருந்து தோன்றிய குழந்தைகள் ஓராறு. அக்குழந்தைகளை எடுத்து வளர்த்த கார்த்திகை மகளிர் ஓராறு. பார்வதி தேவியார். இக்குழந்தைகளை எடுத்து அரவணைத்தபொழுது ஓருடலுடன் தோன்றிய முகங்கள் ஓராறு. சூரபதுமனைக் கொன்றொழிக்க மேற்கொள்ளும் கந்தசஷ்டி விரத நாட்கள் ஓராறு. முருகனது திருக்கண்கள் ஈராறு. முருகனை வழிபட மேற்கொள்ளும் ‘சரவணபவ'
என்ற முருக மந்திரம் ஓராறு. 'குமாரயநம'
என்ற மந்திரமும் ஓராறு. முருகனுக்குரிய யந்திரம் அறுகோணம் உடையது.
இவைபோல் முருகன் உறையும் படைவீடுகளும் ஓராறு. ஆறுமுகப் பெருமானின் திருமுகங்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு திறனை நமக்கு வெளிப்படுத்துகின்றன என்பதனை அருணைத்
திருப்புகழில் அருணகிரியார் கூறுகிறார்.
ஏறு மயில் ஏறி விளையாடும் முகமொன்று
ஈசனுடன் ஞான மொழி பேசு முகமொன்று
கூடும் அடியார்கள் வினை தீர்த்த முகமொன்று
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்று
மாறு படுசூரரை வதைத்த முகமொன்று
வள்ளியை மணம்புணர வந்த முகமொன்று
ஆறு முகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
அறுபடை வீடு:
முருகன் உறையும் படைவீடுகள் ஆறு. இப்படை
வீடுகள் பற்றி முதன்முதலில் உரைக்கும் நூலாகப் பத்துப்பாட்டில் ஒன்றாகிய நக்கீரர்
எழுதிய திருமுருகாற்றுப்படை திகழ்கிறது. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திரு ஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல்,
பழமுதிர்ச்சோலை என்ற ஆறு தலங்களையும் ஆறுபடை வீடுகளாகக் கருதுவர்.
திருச்செந்தூரில்
முருகன் சூரபதுமனை வென்றார். திருப்பரங்குன்றில் தெய்வானையைத் திருமணம்
செய்துகொண்டார். குன்றுதோராடலாகிய திருத்தணியில் வள்ளியை மணமுடித்தார்.
ஆவினன்குடியில் குழந்தையாக உள்ள முருகன் பிரணவப் பொருள் அறியாத பிரம்மனைச்
சிறையிலிட்டார். பிரம்மனை விடுவிக்கவந்த சிவபெருமானிடம் பிரணவப் பொருள் உணர்த்திய
தலம் சுவாமிமலையாகவும், வள்ளி
தெய்வானையோடு திகழும் தலமாகப் பழமுதிர்ச்சோலையும் திகழ்கின்றன.
நமது உடலில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு
ஆதாரங்களே ஆறுபடை வீடுகளாக அமைந்துள்ளன என்பர். மூலாதாரம் திருப்பரங்குன்றம், சுவாதிட்டானம் திருச்செந்தூர்,
மணிபூரகம் ஆவினன்குடி, அநாகதம் சுவாமிமலை,
விசுத்தி குன்றுதோறாடல் (திருத்தணி), ஆக்ஞை
பழமுதிர்ச்சோலையாகும்.
(ப.முத்துக்குமாரசாமி அவர்களின் செந்தமிழ் முருகன் எனும் நூலிலிருந்து,
பக்கம்: 16-18)
No comments:
Post a Comment