முன்னுரை:
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்ப் புலவராகவும், ஆன்மிகச் சுடராகவும் ஒரு சேரத் திகழ்ந்தவர். அவர் அருட்பாடல்களை இயற்றிப் பாடியதோடு மட்டுமல்லாமல் அவை காற்றிலே கரைந்து போகா வண்ணம் தம் கைப்பட எழுதிப் பாதுகாத்த பண்பினர். குமரகுருபரர் குறிப்பிடுவது போலே ஆசு முதல் நாற்கவியும் பாடும் திறத்தர். அவர்தம் பாடல்களில் தமிழ்ப்பற்று, சமய சமரசமெனும் ஒரு கடவுள் கோட்பாடு ஆகிய இரண்டுமே பெருமளவில் ஆட்சி செய்யும் என்றால் அது மிகையில்லை. சுவாமிகளின் ஆயிரக்கணக்கான பாடல்களில் வருக்கக்குறள் என்பதும் சமயம், மெய்யியல், சமூகம் போன்றவற்றை எளியோரும் உணரும் வண்ணம் வடித்துத்தந்துள்ள கருவூலமாகும்.
வள்ளுவருக்குப் பின் எழுந்த தமிழ் இலக்கியங்களில் திருக்குறளின் தாக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. வாழ்வியலின் பல்வேறு தலங்களில் பயணித்தவர் வள்ளுவர். எனவே தமிழிலக்கியங்கள் எந்தவொரு பொருண்மையில் இயற்றப்படினும் வள்ளுவத்தின் அடிச்சுவட்டில் பதிவு என்பதைத் தவிர்க்கவியலாது. ஆகவே இக்கட்டுரை வள்ளுவர் குறட்பாக்களொடு சுவாமிகளின் வருக்கக் குறட்பாக்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ய முற்படுகிறது.
அறக்கோட்பாடு:

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை. (குறள்.315)
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர். (குறள்.997)
என்பனவற்றைக் காட்டலாம். மேலும் சான்றாண்மையைக் குறிப்பிடும்போதும் அதன் முதல் தூணாக விளங்குவது அன்பு, (குறள்.993) என்கிறார் வள்ளுவர். இக்கோட்பாட்டை வண்ணச்சரபர் உள்வாங்கிய பாங்கை வருக்கக் குறளைத் தொடங்கும்போது,
அருள்வழியிற் சோர்வடையா ஆர்வமுளார் எல்லாம்
இருள்வழியிற் சேர்வார்க்கு இகல். (வ.குறள். 1)
என்று குறிப்பிடுவதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். அருள் என்பது அன்பின் மேம்பட்ட தன்மையாகும். அருளென்னும் அன்பீன் குழவி என்பார் வள்ளுவர். அன்பின் குழவி அன்பைக் காட்டிலும் மேம்பட்டதாக வேதான் இருக்க வேண்டும் (தம்மின் தம்மக்கள் அறிவுடைமை). அதனால்தான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிலிருந்து தொடங்குகிறார் எனக் கருதலாம்.
தொடரும்...
முனைவர் கோ.ப.நல்லசிவம்
No comments:
Post a Comment