Thursday, May 23, 2019

திருக்குறளும் வருக்கக் குறளும் - பகுதி 7

வண்ணச்சரபம்
தவத்திரு.
தண்டபாணி சுவாமிகள்
பொதுவாக
வள்ளுவரும் வண்ணச்சரபரும் ஒத்துப்போகும் குறிப்பிட்ட சில இடங்கள் ஈண்டுக்காட்டப்பட்டன. பொதுவாக, உழவைச் சிறப்பித்தல், இல்லறம் போற்றல், தெய்வ வழிபாடு, உவமைகள், அரசன் குறித்த வரையறைகள், சமுதாயச் சிந்தனைகள் போன்ற பல பொருண்மையில் இவ்விருவரும் ஒத்துப்போகின்றனர் என்பது ஆய்வின் வழி உணர முடிகிறது. சான்றுகளாக, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் எனும் குறட்கருத்து, வருக்கக் குறளில்...

உழொரு தொழிலேமிக்கு உத்தமமென்று ஓர்ந்தார்
அழொலி மிடிநோய் அறும். (வ.குறள் 210)

என்றும்,

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல். (குறள்.70)

தம் மின் தம்மக்கள் அறிவுடைமை என்னும் குறட்பாக்களின் கருத்து.

தந்தை பெறும்புகழைத் தம்புகழ்ச்சி யால்மறைக்கும்
விந்தையுற்றார் மானிடரில் மேல். (வ.குறள். 104)

என்றும், முயற்சிதன் மெய் வருத்தக் கூலிதரும் எனும் குறட்கருத்து.

இட்ட படிவருமென்று ஏமாந்து நாட்கழிக்கப்
பட்டவர்கள் எல்லாம் பதர். (வ.குறள். 18)

என்றும், செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் எனும் குறட்கருத்து,

கேள்விப் பெரும்பயனே கேடற்றது என்றுணர்வார்
ஆள்வித்தைக்கு உண்டாம் அணி. (வ.குறள். 39)

எனவும் வருவதைக் காணலாம்.
நிறைவாக...
வள்ளுவரும் வண்ணச்சரபரும் பல்வேறு இடங்களில் ஒத்துப்போகும் இடங்களை மேற்கண்ட பல சான்றுகளின்வழி இக்கட்டுரை நிறுவியுள்ளது. வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் தொடங்கி வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் அலசி ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். வண்ணச்சரபர் தம் காலத்தில் மிக்கிருந்த கொலை, புலை, பெண்ணாசை, போலித்துறவு இவற்றை மட்டுமே மையப்பொருளாகக் கொண்டு வருக்கக்குறளில் பல பாக்களைப் படைத்துள்ளார். உயிரிரக்கம் மிக்க சமூகத்தைப் படைப்பதில் இருவருக்கும் இருந்த வேட்கை இருவரது குறட்பாக்களின் வழியேயும் நன்கு புலனாகிறது. சாதி, மதம், இனம் எனும் குறுகிய மனப்பான்மையை விட்டொழித்து, சமரச சமயத்தை உருவாக்க, மனிதநேயம் தழைத்து உலகம் அமைதியுடன் மகிழ்ச்சியுடன் வாழ வண்ணச்சரபரின் வருகைக்குறள் மிகச்சிறந்த கையேடு என்பதில் இரு வேறு கருத்து இருக்கமுடியாது. இன்றைய பரபரப்பான சூழலில் சிக்கித் தவிக்கும் மனித குலத்திற்கு இத்தகைய அருட் பனுவல்கள் உறுதியாக அமைதியை அளிக்கவல்லன என்பதை உணர் / உணர்த்த வேண்டியது அவசியம்.

உலகிற்கு உதவும் உணர்வுடையார் தாமே
இலகுண்மை ஞானத் தினர். (வ.குறள். 5)

நிறைவு.
முனைவர் கோ.ப.நல்லசிவம்

No comments:

Post a Comment