புலால் மறுத்தல்:
உயிரிரக்கத்தின் ஆணிவேரே புலால் மறுத்தலாகும். புலால் மறுத்தலைப் போற்றாத புலவரில்லை என்னுமளவிற்கு இது குறித்த சிந்தனைகள் வெளிவந்துள்ளன. வள்ளுவர் இதற்கெனத் தனியாக அதிகாரம் ஒன்றையே அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாலடியார், இன்னாநாற்பது போன்ற நீதிநூல்களும் இக்கொள்கையைப் பெரிதும் வலியுறுத்தியுள்ளதைக் காணலாம்.
அருளல்ல தியாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல். (குறள்.251)
என, புலால் மறுத்தற்கு இலக்கணம் படைக்கிறார் வள்ளுவர்.
மேலும்,
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. (குறல்.259)
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும். (குறள்.260)
எனவும் குறிப்பிடுகிறார்.
இக்கொள்கையில் உறுதியாக நின்ற வண்ணச்சரபரும்,
ஊன்அருந்தல் தீதென்று உறுத்தாதார் உற்றஉண்மை
ஞானமுற்றும் தேரில் நகை. (வ.குறள்.6)
புற்கறிப்பால் நீடும் புலாலும் புசிக்கும் அவர்
அற்கை விழைவாரெம் மவர். (வ.குறள். 131)
உணொருவனை மற்றோர் உயிருய்வான் மாற்றல்
தணவாரே உண்மைத் தவர். (வ.குறள். 101)
எனப் புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என ஆன்மநேயம் வலியுறுத்திய வள்ளலார் காலத்தில் வாழ்ந்த வண்ணச்சரபருக்கும் இக்கொள்கை ஊற்றம் என்பது திண்மையாக இருந்ததை மேற்கண்ட சான்றுகளின் வழி உணர முடிகிறது. மேலும் வள்ளுவர் உயிர் வதை செய்து வேள்வி புரிவதைக் காட்டிலும் புலால் மறுத்தல் உயர்ந்தது என்று குறிப்பிடுவது போல வண்ணச்சரபரும்,
சேணாட்டு அரம்பையர்க்காத் தின்னாத தின்னுமவர்
காணார்கள் உண்மைக் கதி. (வ.குறள். 63)
யாகக் கொலைபழியன் றென்றிசைப்பார் யாரெனினும்
ஏகத்துவ முணரா ரே. (வ.குறள். 153)
என்கிறார். இன்றைய சூழலில் பல்வேறு நோய்களுக்குக் காரணம் ஊன்உணும் பழக்கமே என உலகளவில் மருத்துவர்களாலும் சுகாதார நிறுவனங்களாலும் குறிப்பிடப்பெறும் உண்மையைப் பல நூற்றாண்டுகட்கு முன்பே வள்ளுவரும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலார், வண்ணச்சரபரும் பேசியிருப்பது ஞானியரின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுவதாக அமைகிறது.
தொடரும்...
முனைவர் கோ.ப.நல்லசிவம்
No comments:
Post a Comment