ஒழுக்கக் கோட்பாடு
ஒழுக்கத்தை உயிரைக் காட்டிலும் உயர்ந்ததாகப் போற்ற வேண்டும் என்பது வள்ளுவரின் கொள்கை. ஒழுக்கம் தவறிச் செய்யும் எந்தவொரு செயலும் உலகத்தவரால் எண்ணப்படாது. அறிவு, செல்வம், வலிமை போன்ற அனைத்தும் ஒழுக்கம் தவறின் பயனற்றுப் போகும். குறிப்பாக, பெண்ணாசை காரணமாகத் தவறும் செயல்பாடுகளே உலகின் பல்வேறு சீர்கேடுகளுக்கு அடிப்படையாக உள்ளது எனலாம். துறவறத்தின் மிக அடிப்படையான விரதம் பெண்ணாசையை முற்றத் தொலைத்தலாகும்.
மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்பார் வள்ளுவர். முறையான இல்லறத்தின்கண் ஈடுபட்டொழுகும் வாழ்க்கையை எவரும் இழித்துக் கூறவில்லை. முறையற்ற பாலியல் தேடலையே அன்று முதல் இன்று வரை அறிவியலாரும், ஆன்மிகவியலாரும் பழித்து வருகின்றனர். பெண்ணாசை காரணமாக விளைந்த பெரும் விளைவை இராமாயணம் எனும் இதிகாசமே பறைசாற்றும். அதனால்தான் பொய்ப்பெண்டிர் பொய்மை முயக்கம், பிறன்மனை நோக்கல், பெருந்திணை போன்றவற்றை உள்ளடக்கிய பெண்ணாசையை வள்ளலார் மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் என்ற தொடரால் குறிக்கிறார். வள்ளுவர் பேராண்மைக்கு இலக்கணம் என்பதை வகுத்துச் சொல்லும்போது,
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்(கு)
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. (கு.148)
எனக் குறிக்கிறார். மேலும் பலயிடங்களில் இது குறித்த பதிவுகளை நூலெங்கும் பரக்கக் காணலாம்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,
உடுக்கை நிகரிடையார் ஒண்முலைமால் விஞ்சிக்
கெடுக்கையுற்றார்க்கு இல்லை கிளை. (வ.குறள். 84)
இடைஉண்டு இலையெனும் சிற்று ஏந்திழையார்கண்வேற்
படைவென்றார்க்கு இல்லை பழி. (வ.குறள். 88)
இழீனம் தொழிலாம் இலங்கிழையார் தம்மாற்
கெழீஇயார் நோய்பல் கிரி. (வ.குறள். 203)
என வரும் குறள்களின் மூலம் ஒழுக்கக் கோட்பாடுகளை தெளிவாக விளக்குகிறார்.
தொடரும்...
முனைவர் கோ.ப.நல்லசிவம்
No comments:
Post a Comment