Sunday, May 19, 2019

தவத்திரு. கஜபூசைச் சுந்தர சுவாமிகளின் திருப்பணிகளில் சில...

தவத்திரு. கஜபூசைச் சுந்தர சுவாமிகள்
மனிதர்களாகப் பிறப்பவர்கள் பலர் பிறந்து மறைகிறார்கள். ஒரு சிலர் தான் வரலாற்றில் நிலைக்கிறார்கள். சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள். சிரவை ஆதீனம் மூன்றாம் குருமகா சந்நிதானமாக விளங்கிய தவத்திரு. கஜபூசைச் சுந்தர சுவாமிகள் மூன்றாம் வகையைச் சார்ந்தவர்கள்.
20ம் நூற்றாண்டின் பிற்பகுதியான 1994வரை வாழ்ந்த இத்திருமகனார் தனது வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்கள் அனந்தம். பல்வேறு துறைகளில் தம் முத்திரையைப் பதித்தவர் இவர். சமயவாதி, சொற்பொழிவாளர், கல்வியாளர், கவிஞர், எழுத்தாளர், நிர்வாகி, மடாதிபதி என்று பல்வேறு நிலைகளில் அவர் நிலைத்து நின்றாலும் காலம்காலமாக அவர் போற்றப்படுவது அவர் செய்த ஆலயத் திருப்பணிகளுக் காகத்தான். எங்கும் கோயில் திருப்பணிகள் சிறக்கவே அவர் அவதரித்தார் என்றாலும் தவறில்லை என்றே தோன்றுகிறது. அந்த அளவு அத்துறையில் இவர் ஆழங்கால்பட்டவர்.
தோற்றப்பொலிவு
அவரது தோற்றமே எவரையும் கவரவல்லது. நல்ல மாநிறம், கனத்த சரீரம், நீண்ட விரல்கள், அழகிய வெண்தாடி, கழுத்தில் எப்பொதும் திகழும் அக்கமணி மாலை, நெற்றியில் திகழும் நீறு, அதோடு கூடிய அகலமான குங்குமம், நலமா எனத் தேன் ஒழுக்கக் கேட்கும் இனிய குரல் இத்தகைய ஒரு மாமுனிவரை எப்போது இனி பார்ப்போம் என்ற ஏக்கமே இவரை எண்ணும்போது மனதில் தோன்றுகிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பு உண்டு என்பார்கள். அதுபோல இப்பெருந்தகை எங்கு திருவடி பதித்தாலும், அந்த இடம் செல்வம் கொழிக்கும் திருவிடமாக மாறியது என்றால் மிகையில்லை .
மண்ணாளும் அரசர்களும், மதியாளும் அறிஞர்களும் மன்னர் இவர் வாழிடத்தைச் சூழ்ந்து நின்றார்கள்.
கொங்குநாடு அருளிற் பெரியது; ஆனால் அளவிற் சிறியது; கோயில்களும் சிறியவையே; ஆனால் கால மாற்றத்தால் அவையும் புரப்பாரின்றிக் கிடந்தன. இந்த நிலையை மாற்றி, இப்பகுதியை அருள்நலம் சூழ்ந்த பகுதியாக மாற்றியவர் இவரே என்னல் உண்மை ஆகும். எங்கு திருப்பணி வேண்டியிருந்தாலும், திருப்பணி தொய்ந்திருந்தாலும், "அழையுங்கள் சிரவை ஆதீனத்தை" என்ற கோரிக்கைதான் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்தது.
இவருடைய திருப்பணியின் எண்ணிக்கையை அளவிடமுடியாது. மறைந்த 64-வது நாயனாரும் இவரது ஆத்ம நண்பருமான திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொல்வார்கள்; "சிரவை ஆதீனம் எத்தனை கோயில்களைத் திருப்பணி செய்து குடமுழுக்குக் கண்டது என்ற கணக்கு அவருக்கே தெரியாது”. உண்மை அதுதான்.
கிருபானந்த வாரியார் சுவாமிகளுடன்
சுந்தர சுவாமிகள்
அவிநாசி
இவரது திருப்பணி அவிநாசியில்தான் புகழ் பெற ஆரம்பித்தது எனலாம். முதன்முதலாக இக்கோயிலின் அம்மன் தேருக்கு, இரும்பு அச்சு நிறுவவேண்டி இருந்தது. அன்பர்கள் சுவாமியை வேண்ட, இத்திருப்பணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று மிகவும் சிரமமான அக்காலத்தில் வசூல் செய்து அம்மன் தேருக்கு இரும்பு அச்சு நிறுவினார்கள்.
அவிநாசி இராசகோபுரத் திருப்பணி
அவிநாசி இராசகோபுரம்
மின்னொளியில்
அவிநாசி இராசகோபுரம்
அவிநாசியில் முன்னர் இராசகோபுரம் இருந்தது. இடைக்காலத்தில் இடிந்து விழுந்துவிட்டது. இதை இடிக்கச் செய்தவர் ஆங்கிலேய ஆட்சியர் என்பர். கல்கால உத்தரத்தில் ஒரு உத்தரத்தில் விரிசல் கண்டிருந்தது. இதன் காரணமாக, மீண்டும் இராசகோபுரம் எழுப்ப வழியில்லாது போயிற்று. அப்போது, அறநிலையத்துறையின் துணை ஆணையராக விளங்கிய சூரியராஜ் என்பவர் திருக்கோயில் செயல் அலுவலர் திரு. பரமசிவத்தை அனுப்பி, சுந்தர சுவாமிகளை இத்திருப்பணிக்குத் தலைமை ஏற்கச் செய்தார். சுவாமிகள் மிக்க விருப்புடன் இப்பணியினை ஏற்று, மிகவும் உழைத்து, உடைந்த கல் உத்தரத்திற்குப் பதில் காங்கிரீட் உத்தரம் அமைத்து, அதன்மீது புதிய எழுநிலைக் கோபுரம் எழும்ப வழி செய்தார். இக்கோபுரக் குடமுழுக்கு 1980ல் நிகழ்வுற்றது. மிகவும் அரிய செயல் இது. தொடர்ந்து, சுவாமிகள் அருட்செல்வர் உதவியுடன், அம்மன் கோயிலுக்கு ஐந்து நிலை இராசகோபுரத்தையும் புதிதாக அமைத்தார்கள்.
அவிநாசி திருத்தேர்த் திருப்பணி
அவினாசித் திருத்தேர்
அவினாசித் திருத்தேரில்
சிற்ப வேலைப்பாடுகள்
தொடர்ந்து 1990-ல், இக்கோயிலின் திருத்தேர் எரியுண்டு போனது. சுவாமிகள் தமது திருமடத்தின் பெயரில் அமைந்த அறக்கட்டளை மூலம், புதிதாகத் திருத்தேர் செய்தார்கள். அம்மனுக்கும் புதிதாகத் திருத்தேர் அமைத்தார்கள். இக்கோயில் உட்புறம், வெளிப்புறம் எல்லாம் விரிவான திருப்பணி சுவாமிகளால் செய்யப் பெற்றது. இத்திருப்பணி 1993- ல் நிறைவேறியது. இந்தத் திருப்பணியின்போது வாரியார் சுவாமிகள் அவிநாசி நகரில் தொடர்ந்து தொடர் சொற்பொழிவு நிகழ்த்தித் திருப்பணி நிறைவேற உதவி செய்தார்கள். இவ்வாறு அவிநாசியப்பர் மீது அவர் கொண்ட அன்பின் காரணமாகவே அவிநாசியப்பரும், கருணாம்பிகையும் திருமடத்தில் கோயில் கொண்டு விட்டனர் எனலாம். இந்தத் திருப்பணி தனி வரலாறு. அருகாமையில் உள்ள திருமுருகன்பூண்டிக் கோயில் தொல்பொருள் துறையில் இருந்தாலும், சுவாமிகள் இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற உதவினார்கள்.
திருச்செங்கோடு
பாடல்பெற்ற கொங்குநாட்டுத் தலமான திருச்செங்கோட்டுத் திருக்கோயில் மலைப்பாதை அமைக்கும் பணியிலும், திருக்கோயில் திருப்பணியிலும் சுவாமிகள் தலைமையேற்று நிறைவு செய்தார்கள். அன்னூர்
கொங்குநாட்டில் மிகப்பெரிய லிங்கத்திருமேனி இருக்கும், தலம் அன்னூர். இக்கோயில்த் திருப்பணித் தலைமை ஏற்று. பழுதுற்றிருந்த கருவறை, விமானம் முதலியனவற்றை திருப்பணி செய்து 1979 லும், பின்னர் 1990லும் மகா கும்பாபிஷேகம் செய்தார்கள்.
குமரன் குன்று
குமரன் குன்று
அன்னூர் அருகில் உள்ள குமரன்குன்று எனும் சிறுமலையில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் ஆலயத்திருப்பணிக்குத் தலைமையேற்றுக் கும்பாபிஷேகம் கண்டார்கள்.
குருந்தமலை
குருந்தமலை
குருந்தமலையில் எழுந்தருளியுள்ள முருகன் திருக்கோவிலுக்கும் சுவாமிகள் தலைமையேற்றுத் திருப்பணி கண்டார்கள்.
வனபத்ரகாளியம்மன் கோயில், மேட்டுப்பாளையம்
வனபத்ரகாளியம்மன் கோயில்
முகப்புத் தோற்றம்
மேட்டுப்பாளையம் அருகில் உள்ள வனபத்ர காளியம்மன் கோயில் இன்று மிகப் புகழ் பெற்று விளங்குகிறது. ஒரு காலத்தில் மிகவும் அடவியாகிக் கிடந்த இடம். மூலவர் கிடையாது. சிறிய மேடையைத்தான் அம்பாளாக வழிபட்டனர். சுவாமிகள் இத்திருப்பணியில் தலைமை ஏற்று, தற்போதுள்ள மூலவர் திருமேனியைப் புதிதாக நிறுவிக் குடமுழுக்குக் கண்டார்கள். இந்தத் திருப்பணியின்போது வாரியார் சுவாமிகள் மேட்டுப்பாளையம் நகரில் தொடர்ந்து எட்டு நாட்கள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தித் திருப்பணி நிறைவேற உதவி செய்தார்கள். மேட்டுப்பாளையம் நகரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கும் திருப்பணி கண்டார்கள்.
கருவலூர் மாரியம்மன் கோயில்
இராசகோபுரம்

கருவலூர்
அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோயில்
விராலிக்காடு
கருவலூரில் உள்ள மாரியம்மன் திருக்கோயிலுக்கு இரண்டு தடவை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் கண்டார்கள். இரண்டாவது தடவை அம்பிகைக்கு, புதிதாக ஐந்து நிலை இராசகோபுரம் எழுப்பி, கும்பாபிஷேகம் கண்டார்கள். விராலிக்காடு அவிநாசிக்கு அருகாமையில் உள்ள விராலிக்காடு அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோயிலுக்கும் சுவாமிகள் தலைமை ஏற்றுத் திருப்பணி கண்டார்கள். கோவைநகரில் சிறியதும், பெரியதுமாகப் பல கோயில்களுக்குச் சுவாமிகள் திருப்பணி கண்டார்கள். சூலக்கல் மாரியம்மன் கோயிலில் திருப்பணி செய்து புதிதாக அம்மன் திருவுருவச் சிலை நிறுவினார்கள். கோவை நகர்த் திருப்பணிகள்
காந்திபுரம், குறுக்கு வெட்டுச்சாலையில் உள்ள சித்திவிநாயகர் ஆலயம் சுவாமிகள் தலைமையில் நிறுவப்பட்டதே ஆகும். புலியகுளத்தில் உள்ள மாரியம்மன் கோயிலிலும் விரிவான திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தார்.
கோவைநகரில், இன்று நாம் காணும் கோனியம்மன் திருக்கோயில் முற்றிலுமாகச் சுவாமிகள் அமைத்ததே ஆகும். பழைய கோயில் சுண்ணாம்பாலும் சாந்தாலும் அமைந்திருந்ததை அகற்றி, கருங்கல் திருப்பணி செய்து, தற்போதுள்ள நிலையில் மாற்றி அமைத்தது சுவாமிகளேயாகும்.
மருதமலை
மருதமலை அருள்மிகு
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, பழுதடைந்திருந்த பழைய கருவறையை அகற்றி, புதிதாகக் கருவறை நிறுவி இராசகோபுரம் அமைக்கும் திருப்பணியையும் நடத்திவந்தார்கள்.
பேரூர்
பேரூர் அருள்மிகு பட்டிப்பெருமான் திருக்கோயில் சுவாமிகளுக்கு மிகவும் விருப்பமான தலமாகும். இத்தலத்துத் திருப்பணிக் குழுவிற்குச் சுவாமிகள் தலைமை ஏற்றுக் கும்பாபிஷேகம் கண்டார்கள். வெள்ளியங்கிரி
வெள்ளியங்கிரி கொங்குநாட்டின் மேற்கு எல்லை. இக்கோயிலின் அடிவாரத்தில் முன்னர் கோவில்கள் இல்லை. அரசமரத்தடியில் உள்ள ஒரு கல்லைச் சிவலிங்கமாக வழிபட்டு, மலை ஏறி வழிபட்டு வருவதே வழக்கமாக இருந்தது. சுவாமிகள் தலைமை ஏற்று, அடிவாரத்தில் கருங்கல் திருப்பணி செய்து, விநாயகர், சுவாமி, அம்பாளுக்குத் தனித்தனிச் சந்நிதி நிறுவித் திருப்பணி கண்டார்கள். இக்கோயிலின் திருக்குட நீராட்டின்போது அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் இராம வீரப்பன் கூறினார் "மாவட்டத்திற்கு ஒரு சுந்தர சுவாமிகள் இருந்தால் தமிழ்நாட்டில் அறநிலையத்துறை என்ற அமைப்பே தேவையில்லை” என்று. பொருத்தமான வார்த்தை. கொழுமம்
அருள்மிகு தாண்டவேசுவரர் திருக்கோயில்
கொழுமம்

உடுமலைப்பேட்டை அருகில் உள்ள ஊர் கொழுமம். இவ்வூர் சங்ககாலப் புகழ் பெற்றது. கொங்குச் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இவ்வூரில் உள்ள தாண்டவேஸ்வரர் கோயில்தான் கொங்குநாட்டில் மிக அதிகமான சொத்துக்களைக் கொண்டு இலங்கிய கோயில். இனாம் ஒழிப்புக்குப்பின் வளம் சுருங்கியது. இங்குள்ள நடராசர் திருமேனி மிகமிக அழகானது. கும்பாபிஷேகமும் இல்லை. சுவாமிகள் திருப்பணித் தலைமையேற்று, இக்கோயில் திருப்பணியை நிறைவு செய்தார்கள்.
தென்காசியில் உள்ள புகழ்பெற்ற இராசகோபுரத் திருப்பணிக்கு தினத்தந்தி பத்திரிகை அதிபர், திரு சிவந்தி ஆதித்தன் விருப்பப்படி, திருப்பணியின் சிறப்புத் தலைவராக விளங்கிப் பணியாற்றினார்கள்.
ஆவுடையார் கோயில் (திருப்பெருந்துறை)
ஆவுடையார் கோயில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் என வழங்கும் திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் திருப்பணி கண்டது. பின்னர் பாண்டிய மன்னர்கள் திருப்பணி கண்ட தலம். அற்புதமான, எழுத்தில் அடங்காத சிற்பச் சிறப்புக்கள் கொண்டது. இத்திருக்கோயில் புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் அருளாட்சியில் இலங்குவது. ஆயினும், யாது காரணம் பற்றியோ, இக்கோயிலின் திருப்பணி நிறைவு பெறாமலே நின்றது. இது கண்டு வருந்திய துறைசை ஆதீனகர்த்தர், அப்போது நீதியரசராக விளங்கிய திரு.செங்கோட்டுவேலரின் ஆலோசனைப்படி, இக்கோயில் திருப்பணியை நமது சுந்தர சுவாமிகளிடம் ஒப்படைத்தார். சுவாமிகள் இதை மிகவும் போற்றி, ஈரோடு அழகப்பர் உதவியுடன் திருப்பணியை மிகச் சிறப்பாகவும் மிக விரைவாகவும் நிறைவேற்றினார். இந்தத் திருப்பணியின்போது, சுவாமிகள் குடிப்பதற்குக் குடிநீர் கூட கோவையில் இருந்து காரில் கொண்டுசெல்லப்படும். அந்த அளவு மிகவும் அறத்துன்பப்பட்டு, இக்கோயிலில் ஓடாது நின்று போன, திருத்தேரையும் செப்பனிட்டு ஓடச் செய்தார். பின்னர் திருவாசகப் பாடல்கள் முழுவதையும் கருங்கல்லில் பொறிக்கச் செய்தார். விரிவான திருப்பணி மேற்கொண்டார். இத்திருப்பணியைச் சுவாமிகள் தமது வாழ்நாள் பேறாகக் கருதினார். இக்கோயில் மகாகும்பாபிஷேகத்தின்போது, காஞ்சி காமகோடி பீடம் சுவாமிகள் கூறினாராம், "யாரும் செய்ய இயலாத பணியைச் செய்துவிட்டு ஒதுங்கி நிற்காதீர்கள். முன்னே வாருங்கள், அமருங்கள் என்று" - சரிதானே?
கௌமார மடாலயத் திருக்கோயில்த் திருப்பணி
திருமடத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள கருவறையை முற்றிலும் கற்றளியாக அமைத்தார். மொத்தம் 51 கற்களால் மட்டுமே இந்தத் திருப்பணி நிறைவு செய்யப்பட்டது. இக்கோயில் விமானத்தைத் தஞ்சை தட்சிணமேரு விமானத்தைப் போன்று உயரமாக அமைத்து விரிவாகத் திருப்பணி செய்தார்.
காங்கயத்தை அடுத்த சிலம்பகவுண்டன் வலசு வெங்கடரமணசாமிக் கவுண்டர் 1919ஆம் ஆண்டில் தமது தோட்டத்தில் ஒரு சிவாலயம் எழுப்பினார். அவருக்குப்பின் அக்கோயில் பூசையின்றிப் போனது. அவரது பேரர் ராமசாமிக் கவுண்டர் விருப்பப்படி அக்கோயிலைப் பிரித்துக் கொணர்ந்து மடாலயத்தில் மீண்டும் நிறுவி மூன்றே மாதத்தில் குட நீராட்டும் செய்தார். இது கொங்கு நாட்டுக் கற்றளித் திருப்பணி வரலாற்றில் ஒரு மைல்கல்.
பாண்டுரங்கர் சந்நிதி புதிதாகக் கட்டினார். முருகனுக்குப் புதிதாகத் திருத்தேர் அமைத்தார். தனியாகச் சனிபகவான் கோயில் அமைக்கவும் ஏற்பாடு செய்தார். திருமடத்தில் பாம்பன் சுவாமிகள் சந்நிதி அமைத்தார். இங்ஙனம், சுவாமிகள் கண்ட திருப்பணிகள் அநந்தம். விவரிக்கின் தனிநூலாக அமையும்.
அமெரிக்க தாமரைக் கோயில் நிறுவனர்
சச்சிதானந்தா சுவாமிகளுடன் சுந்தர சுவாமிகள்

தமிழகத்தில் மட்டும் அன்று, பிற நாடுகளிலும் திருப்பணிகள் நிறைவேற ஆலோசனைகள் நல்கினார். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் விரும்பியபடி, அமெரிக்காவில், தாமரைக் கோயில் கட்ட, மடாலயத்தில் சிற்பங்கள் செய்து அனுப்பி அக்கோயிலை நிறுவி, குடமுழுக்கும் கண்டார்.
தாமரைக் கோயிலுக்கான சிற்பங்கள்
கௌமார மடாலயத்தில் செதுக்கப்பட்டபோது...
சுவாமிகள் காலத்தில், மடாலயத்தில் கருங்கல் சிற்பிகளின் உளியோசை எப்போதும் "கல்கல்” என்று கேட்டுக்கொண்டே இருக்கும். அத்தகைய வரலாற்று நாயகர் அவர்.
சுவாமிகளிடத்தில் அற்புதமானஓர் ஆற்றல் இருந்தது. எந்தத் திருக்கோயில் திருப்பணி தடைப்பட்டிருந்தாலும் அவர் திருவடி பட்ட உடனே அந்தக் கோயில் திருப்பணி நிறைவேறிவிடும். அதற்குக் காரணம், அந்தக் கோயிலைப் பார்த்த உடன், சுவாமிகள் திருப்பணியில் சில திருத்தங்கள் செய்யக் கூறுவார். அவற்றைச் செய்ய ஆரம்பித்ததுமே திருப்பணி நிறைவேறி விடும்.
அவர் செய்யும் திருப்பணிகளில் ஏழையென்றோ பணக்காரர் என்றோ வேறுபாடு காட்டமாட்டார்.
பெருந்தொகை கொடுத்தவர்க்கு என்ன மரியாதையோ, அதே மரியாதைதான் எல்லோருக்கும். பெரியவர்கள், சிறியவர்கள், ஆண்கள், பெண்கள் என வேறுபாடு காட்டாமல் ஒரு பெருங்கூட்டம் அவர்பால் அன்பைச் செலுத்தியது.
இக்கட்டுரை ஆசிரியர் ஆகிய நான் செயல் அலுவலராகப் பணிபுரிந்த பல திருக்கோயில்களுக்குச் சுவாமிகள் தலைமை ஏற்றுத் திருப்பணி நிறைவேற உதவினார்கள். குறிப்பாகக் கொழுமம், அன்னூர், கருவலூர், அவிநாசி ஆகிய கோயில்களைக் குறிப்பிடலாம். இந்தக்கட்டுரையில், அப்பெருமகனார் செய்த திருப்பணிகளில், ஒரு சிலவே குறிப்பிடப்பட்டுள்ளன. சிறியதும், பெரியதுமாகக் குறைந்த பட்சம் ஆயிரம் கோயில்களுக்குமேல் அவர் திருப்பணி செய்திருப்பார்.
கொங்குநாடு இன்று இந்த அளவு அருளிலும், பொருளிலும் வளர்ந்திருக்கிறது என்றால் அது சுந்தரசுவாமிகள் செய்த ஆன்மிக மறுமலர்ச்சியால்தான் என்பதில் சற்றும் ஐயமில்லை என்பதைச் சுவாமிகளோடு பழகியவர்கள் எல்லோரும் அறிவார்கள்.
சுவாமிகள் ஒரு கற்கண்டு மலை. அதில் எப்பக்கம் தொட்டாலும் இனிக்கும். திருப்பணி என்பது அவர் ஆற்றிய பெருந்தொண்டு. ஒரு தனி மனிதர் இத்தனை கோயில்களுக்குத் திருப்பணி செய்தார்; நிறைவு செய்தார்; தமிழிலும், வட மொழியிலும் திருக்குட நீராட்டல் செய்தார் என்பது வெறும் செய்தியன்று; வரலாறு. காலம் இதைப் பதிவு செய்யும். எதிர்காலத்தில் இன்னும் எத்தனையோ பேர் திருக்கோயில்களுக்குத் திருப்பணி செய்வார்கள்; செய்ய வேண்டும். ஆனால் அவை எல்லாம் சுந்தரர் செய்த திருப்பணிகளுக்கு இணையாகா என்பதே வெளிப்படை.
சுந்தர! நின்
சுந்தர முகமும்
அந்தமில் திருப்பணியும்
ஆரே காண்பார் இனி?
சிரவையாதீனப் புலவர்.
அழ.முத்துப்பழனியப்பன்,
மேனாள் உதவி ஆணையர்,
(இந்து சமய அறநிலையத்துறை),
வழக்கறிஞர், கோவை.

No comments:

Post a Comment