Tuesday, July 9, 2019

நாபதாசர் கதி | தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் அருளிய பக்தமான்மியம் | 104 வைணவ அடியார்களின் சரித்திரம்

வைணவ அடியார்களின் அருள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்கள் சுருக்கமாக வசன நடையில்...
நாபதாசர்
   மேனாடு என்னும் நாட்டை ஆட்சி செய்யும் அரசர் மானசிங்கர். கல்வி கேள்விகளில் சிறந்தவர். நல்ல பண்புகளும் நிறைந்தவர். நல்ல சற்குரு ஒருவரை அடைந்து அவரது அனுக்கிரகத்தால் ஞானம் பெறவேண்டும் என்ற பெருவிருப்புள்ளவராகிச் சற்குருவின் வரவை எதிர்பார்த்திருக்கின்றார்.
  
நாராயணக் கடவுளின் திருவருட் செல்வம் பெற்ற சீலம் மிக்க 'கிருட்டிணதாசர்' என்னும் பெரியவர் தனது மாணவர்களாகிய 'அக்கிரன்' 'கீல்கன்' என்னும் இருவர்களோடு மானசிங்க அரசரின் நாட்டுக்கு வந்து, அரசரைச் சந்திக்கின்றார். அருளாளராகிய கிருட்டிணதாசரைக் கண்ட அரசர், மிக மகிழ்ச்சி அடைந்தவராகி அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப், 'பெருமானே தாங்கள் இங்கேயே என் நாட்டிலேயே தங்கி எளியேனை ஆட்கொண்டருளத் திருவுளம் கொள்ள வேண்டும்' என மீண்டும் அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறார். அவரது பேரன்பையும் பணிவையும் கண்ட கிருட்டிணதாசர் உன் விருப்பப்படியே ஆகட்டும் என்று அருளாசி வழங்கினார்.
  
மானசிங்கர் தனது அரண்மனைக்கு மேற்குத் திசையில், ஒரு ஆசிரமம் அமைத்து; அதில் கிருட்டிணதாசரும் அவரது மாணவர்களும் தங்கி வாழும் படிச் செய்து, தினந்தோறும் ஆசிரமத்துக்குச் சென்று கிருட்டிணதாசரை வணங்கிப் போற்றி அவரது உபதேச மொழிகளை ஏற்று அருட்செல்வத்தை அடைந்து கொண்டிருக்கின்றார். குருநாதராகிய கிருட்டிணதாசரது வேள்வி, பூசனைக்கு வேண்டிய தர்ப்ப , சமித்து, மலர், பாத்திரம், முதலியனவற்றைக் கீல்கன், அக்கிரன் ஆகிய இருவரும் காட்டுக்குள் சென்று தினமும் கொண்டு வருவார்கள். அப்படி ஒருநாள் வரும் பொழுது வழியில் இளவயதுள்ள ஒரு பாலகன் மயங்கிய நிலையில் கிடக்கின்றான். அவனைப் பார்த்த கீல்காக்கிரர்கள் தண்ணீர் கொண்டு வந்து அவன் முகத்தில் தெளித்து, மயக்கம் நீங்கச் செய்து அவனைத் தம்முடன் அழைத்துக் கொண்டு, ஆசிரமம் வந்து சேர்கிறார்கள். அவனைத் தம் குருநாதரிடம் அழைத்துச் சென்று விவரத்தைக் கூறுகின்றார்கள்.
   
   கிருட்டிணதாசர் சிறிது நேரம் தம் விழிகளை மூடிய நிலையில் இருந்து அந்தப் பாலகனுடைய தன்மைகளைச் சிந்தித்து அறிந்து சொல்கின்றார். இவன் பிற்காலத்தில் பக்தியிற் சிறந்த சித்தருகனாவான். இவனை நம் ஆசிரம முகப்பில் இருக்கச் செய்து, வரும் அடியவர்களை வரவேற்கச் செய்யுங்கள். இங்கு வந்து செல்லும் அடியார்களின் பாதம் அலம்பும் தீர்த்தத்தைப் பிடித்து வைத்துக் கொண்டு, அதனையே இவர் குடிக்கவும் குளிக்கவும் செய்யுங்கள். அடியவர்கள் அமுதருந்திய மிச்சில் பிரசாதத்தை இவன் உண்ணக் கொடுங்கள் என்று உத்தரவிட்டு, அவனுக்கு 'நாபதாசன்' எனப் பெயரிட்டு அனுப்பினார்.

'கண்ணுறல் பக்தர்சேவை காதுறல் அவர்சொல் வார்த்தை
பண்ணுதல் அவர் நல் ஏவல் படிதல் பாதோத கத்தில்
உண்ணுதல் அவர்தம் சேடம் உயிர்த்தல் அன்னவர் மெய்க்காற்றே நண்ணுறும் நாபதாசன் நற்றவம் பெற்றார் யாரே?'

   இவ்வாறு பல நாட்கள் பக்த சேவை செய்து கொண்டிருந்தார் நாபதாசர். இவருடைய நல்ல பக்குவத்தை அறித்த அக்கிரதாசர் இவருக்குத் தாரக மந்திரோபதேசம் செய்தருளினார். உபதேசம் பெற்ற நாமதாசர், இரவு பகலாக அந்த மந்திரத்தைச் செபித்துக் கொண்டு தம் குருநாதரான அக்கிரதாசருக்குப் பணிவிடை செய்து கொண்டும் இருக்கின்றார்.
  
ஒருநாள் அக்கிரதாசர் தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து நாராயணக் கடவுளைத் தியானம் செய்து கொண்டிருக்க, அவருக்குப் பக்கத்தில் நாபதாசர் நின்று கொண்டு சாமரை வீசிக் கொண்டிருக்கின்றார். நெடுநேரம் குருநாதர் தியானத்தில் லயித்திருந்தார்.
  
இந்த அக்கிரதாசருக்கு ஒரு தனவணிகர் மாணவனாக இருந்தார். பெரிய கப்பல் வியாபாரி. குருநாதரையே கடவுளாகச் கருதிப் பூசிப்பவர். கப்பல் நிறையப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வேறு ஒரு நாட்டுக்கு வியாபார நிமித்தமாக சென்று கொண்டிருக்கையில், புயலால் கடல் கொந்தளிப்புக் கொண்டது. கப்பல் கவிழ்ந்து விடுமோ என அனைவரும் அஞ்சும் நிலைமை ஏற்பட்டது. அந்தத் தனவணிகர் தமது கடவுளாகிய அக்கிரதாசரை நினைந்து மனம் உருகித் தோத்தரித்துக் கப்பல் மூழ்கி விடாது திருவருள் செய்ய வேண்டுகின்றார். எல்லாம் வல்ல நாராயணக் கடவுளின் திருவருளால் கடல் கொந்தளிப்பு நீங்கி அமைதி உண்டாகிக் கப்பல் நல்ல நிலைக்கு வருகின்றது.
   
   தியானத்திலிருந்த அக்கிரதாசர் அந்த நிலை நீங்கிச் சகநிலைக்கு வருகின்றார். நாமதாசர் அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து, கப்பல் அபாய நிலையைக் கடந்து விட்டது, சேமமாகச் செல்கின்றது என்றார். தமது ஞான திருஷ்டியால் எல்லாம் தெரிந்து கொண்டுள்ள குருநாதர், மிக மிக மகிழ்ந்து நாபதாசரைத் தழுவிக் கொள்கிறார்.
  
பின்பு ஒருநாள் அக்கிரதாசர் தமது மாணவராகிய நாமதாசரைப் பார்த்து 'முற்காலத்தில் இருந்த அரிதாசர்கள் வரலாற்றையும், இக்காலத்துள்ளவர் கதைகளையும், இனி வருங்காலத்தில் தோன்றித் திருவிளையாடல் செய்யும் பக்தர்களின், சரித்திரங்களையும் பக்த கதையாகப் பாடிவைப்பாயாக மானிடர்கள் அதைச் சிரவணம் செய்து அருட்செல்வத்தை அடைந்து உய்தி பெறுவார்களாக' எனக் கூறியருளுகிறார். நாமதாசர் தமது குருநாதரை வணங்கி எழுந்து, பெருமானே ஒன்றும் அறியாச் சிறியேன் மூன்று காலங்களிலும் இருந்த, இருக்கின்ற, இருக்கும் பக்தர்களின் கதைகளை எவ்வாறு சொல்ல முடியும் என்று கூறினார்.
  
அக்கிரதாசர் அருளிச் செய்கின்றார். 'அலைவீசும் நடுக்கடலில் கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு, பின்பு அது நீங்கி, நல்ல வண்ணமாகச் செல்வதை, எவ்வாறு சொன்னாயோ அது போலத்தான் பக்தர்கள் கதைகளையும் உன்னால் சொல்ல முடியும் உடனே எழுதத் தொடங்கு' என ஆசி கூறி அனுப்புகிறார். பின்பு நாமதாசர் தனது ஞான திருஷ்டியால் பக்தர்கள் வரலாற்றை அறிந்து, 'பக்த கதா' என்னும் பெரிய காவியம் ஒன்றைச் செய்தருளுகிறார். அக்காவியம் வடநாட்டில் இன்றும் விளங்குகிறது. இங்கு தமிழ் நாட்டில் 'பக்த விஜயம்' என்னும் வசன நடையில் உள்ளது. நாமதாசருக்கு 'நாபாஜி சித்தர்' என்னும் பெயர் அதில் காணப்படுகிறது.

கிருட்டிணப்பேர்த் தேசிகன்தாள் கிட்டி வணங்கும் அக்கிரனும்
கீல்கன் தானும் கண்டுவப்பால் கிளர்கண் விளங்கப் புரிந்து ஒருதம்
குருப்பால் உரைத்துய்த்திட அவன்வாய் கூறும் நாபப் பெயர்சூடிக்
குறையா மகிமை அக்கிரனைக் குருவாக்கொண்டு பணிபுரிகால்
இருட்கார் ஆழிஇடைக்கலம் ஆழ். இன்னல் அகன்றே நெடுந்தூரம்
ஏகும் விவரம் தெரிந்துரைத்த இணைதீர் நாப தாசர் என
இருக்கமுடிவோர் பத்தர்புகழ் எல்லாம் சொலும்சீர் எனக்கருள்வாய்
இராமானந்தப் பெயர் கொடெனது இதயத் திலங்கும் பெருமாளே.

அடுத்த பதிவில் அனுமார் கதி...
கொங்கு நாட்டுக் கச்சியப்பர் என்றழைக்கப்பட்ட சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம் அருள்திரு. கந்தசாமி சுவாமிகள் அருளிய பக்தமான்மியம்

இதில் 104 வைணவ அடியார்களின் சரித்திரம் உள்ளது. 7373 பாடல்கள். இந்தப் பக்தர்களின் அருள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களைச் சுருக்கமாக வசன நடையில் எழுதினால் அன்பர்கள் பலரும் படித்துப் பயன்பெற வாய்ப்பாக இருக்கும் என்னும் எண்ணத்தால் இது எழுதப் பெறுகிறது.
தவத்திரு தம்பி சுவாமிகள் (எ) மருதாசல சுவாமிகள்,
கௌமார மடாலயம் (கெளமார அமுதம் மாதாந்திர இதழில் வெளிவந்த
கட்டுரைகளின் தொகுப்பு)

No comments:

Post a Comment