Monday, July 15, 2019

அனுமார் கதி | தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் அருளிய பக்தமான்மியம் | 104 வைணவ அடியார்களின் சரித்திரம்


வைணவ அடியார்களின் அருள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்கள் சுருக்கமாக வசன நடையில்...
அனுமார்
அயோத்தியை ஆண்ட தசரதச் சக்ரவர்த்தியின் திருமகனாக அவதரித்துப் பிதுர்வாக்கிய பரிபாலனஞ் செய்யப் பதினான்கு வருடம் சீதா பிராட்டியாருடன், இலக்குவனும் உடன்வர, வனவாசம் செய்கிறான் இராமன். பஞ்சவடியில் தங்கியிருந்த போது சீதா பிராட்டியாரை இராவணன் கவர்ந்து செல்ல, அவனைச் சங்கரித்துச் சீதாதேவியாரை மீட்க, வானரச் சேனைகளுடன் இலங்கைக்குச் செல்லக் கடலணை செய்யக் கடற்கரையில் நின்று கொண்டிருக்கின்றார்.

இராவணன் சீதாபிராட்டியாரைக் கவர்ந்து வந்ததை அறிந்த, அவனது தம்பியாகிய விபீடணர் 'அண்ணா ' இது மிக மிகப் பாபச் செயல், இதனால் நம் குலமே அடியோடு நசிந்துவிடும். சீதா தேவியாரை இராமரிடமே கொண்டு போய் விடுவது தான் நமக்கு நல்லது எனப் பலவாறு புத்திமதி சொல்ல, அழிவுகாலம் நெருங்கிவிட்ட இராவணன் தம்பியின் சொல்லை ஏற்றுக் கொள்ளாது கோபித்து நிந்தனை செய்து, 'நீயா எனக்குப் புத்தி சொல்பவன் எதிரில் நில்லாதே போய்விடு' எனச் சீறுகிறான். மனம் நொந்த விபீடணர் இராவணனைப் பிரிந்து வந்து, இராமரையே சரணாகதியடைகிறர். விலையுயர்ந்த மணிமாலை ஒன்றை இராமபிரான் கரத்தில் தந்து விட்டு அவரை வணங்குகிறார். விபீடணருக்கு அபயம் தந்து அவரது சரணாகதியை ஏற்றுக் கொள்கிறார்.

விபீடணர் தந்த மணிமாலையைத் தம் சமீபத்தில் நிற்கும், ஆஞ்சனேயரது கழுத்தில் அணிவிக்கிறார் பெருமான். அந்த மாலையில் உள்ள மணிகளை ஒவ்வொன்றாக விரல்களால் நகர்த்திப் பார்த்த ஆஞ்சனேயர் ஒரு மணியைத் தம் பற்களால் கடித்துப் பார்த்துப் பின் மாலையைத் தம் கழுத்திலிருந்து எடுத்துத் தூரவீசியெறிகிறார். இதனைக் கண்ட அங்குள்ள அனைவரும் (இராமரைத் தவிர) குலத்தளவே ஆகும் குணம் என்னும் மொழி மிக மிக உண்மையே. குரங்கின் கைப் பூமாலை என்பது போல மணிமாலை ஆகிவிட்டது; எனச் சிரித்து இகழ்ந்து பேசுகிறார்கள். உடனே ஆஞ்சனேயர் தாம் செய்த இச்செயலுக்கு விளக்கம் தருகிறார். இராமபிரானை யாரொருவர் உள்ளத்தே கொள்ளாதிருக்கின்றாரோ அவர்களையும், எந்தப் பொருளில் ராமநாம முத்திரை இல்லையோ அந்தப் பொருளையும் என் மனம் ஏற்றுக் கொள்ளாது யாவர்க்கும் அவரவர் உடல் மீது அபிமான அன்பு இருக்கும், எனது உடல் மீது எனக்கும் அபிமானம் உண்டு அதில் ராமநாம் முத்திரை இருப்பதால் இதோ பாருங்கள் எனத் தமது திருமேனியைக் காட்டினார் உடலின் எல்லாப் பகுதிகளிலும் இராம் இராம் என்னும் மந்திரம், எல்லார் கண்களுக்கும் தோன்றுகிறது பின்பு தான் ஆஞ்சனேயர் பெருமை அனைவர்க்கும் தெரிகிறது.

ஆஞ்சநேயர் செய்த மாபெருங் காரியங்கள் ஏராளம் அவற்றையெல்லாம் சொல்லி முடிக்க யாவராலும் முடியாது. இராமபிரானும் சுக்ரீவனும் நண்பராகும்படி செய்ததும், கடலைத் தாண்டிச் சீதா பிராட்டியாரைத் தேடிச் சென்று, இலங்கையில் அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த பிராட்டியாரைக் கண்டு அவருக்கு, இராமரது கணையாழியைக் கொடுத்ததும், அட்சகுமாரன் முதலான பல அரக்கர்களை அழித்ததும், தமது வாலில் இராவணன் இட்ட தீயைக் கொண்டே இலங்கையை எரித்ததும், மீண்டு வந்து கடலில் சேது செய்து வானர சேனைகளை எல்லாம் இலங்கைக்குள் செல்லச் செய்ததும், சஞ்சீவி பர்வதத்தைக் கொண்டு வந்து இலக்குமணனைப் பிழைக்க வைத்ததும்
முதலான பற்பல வீரதீரச் செயல்கள் அளவிலாதன.

துவாரகையைக் கண்ணபிரான் ஆட்சி செய்து கொண்டிருக்கும் காலத்தில் தேவலோகத்திலுள்ள பாரிசாத மலரைக் கொண்டுவந்தார். தமது பட்டமகிஷிகள் எட்டு பேர்களிலும், தமது அன்பு மிக்க சத்தியபாமாவுக்கு அந்த மலரைத் தந்தார். அதைச் சூடிக் கொண்ட சத்யபாமாவுக்கு எட்டு மங்கையர்களிலும் கண்ணபிரானுக்கு உவப்பானவள் தானே என எண்ணி அகங்காரம் கர்வம் அதிகரித்தது. அந்தக் காலகட்டத்திலேயே தனக்கு
மிஞ்சி வேகமாகச் செல்லக் கூடியவர் உலகில் எங்கும் இல்லை என்னும் எண்ணம் கருடாழ்வாருக்கு உண்டாகி அவருக்கும் கர்வம் அதிகரித்தது. சக்கரத்தாழ்வாராகிய சக்கரப்படைக்கும் ஆற்றலில் தன்னைப் போன்றவர் யாரும் இல்லை என்னும் மமதை உண்டாகியிருந்தது. வாணாசுரனது ஆயிரம் கைகளையும் ஒரு நொடியில் அறுத்தெறிந்தது, துர்வாச முனிவரை ஓட ஓட விரட்டியது போன்ற செயல்களை நினைந்து கர்வம் கொண்டிருந்தது.

  இப்படி மூவரும் தம்மைத் தாமே பெரியோன் என மதித்துக் கர்வம், கொண்டிருந்ததை அறிந்த கண்ணபிரான் பக்குவமாக மூவரது ஆணவத்தையும் நல்லறிவுண்டாக்கத் திருவுளம் கொண்டார். ஒருநாள், 'சத்தியபாமா தம் அருகில் இருக்கும் போது, மிகுந்த கவலையாய் இருப்பது போல முகத்தை திருப்பிக் கொண்டு கபட நாடகம் நடித்தார். கண்ணபிரானது முகவாட்டத்தைக் கண்ட சத்தியபாமா 'சுவாமீ! நும் திருவுளத்தில் ஏதோ ஓர் பெரிய-துக்கம் அடைதுளதாகத் தோன்றுகின்றது உம்மது - உவாமதி நேர்முகம் சாம்பியுற்றது. எதனால் இது நேரிட்டது என்பதை அடியாள் தெரியும் வண்ணம் கூறியருள வேண்டும்' என்று கேட்டாள்.

கண்ணபிரான் - எனது அன்புக்குரிய சத்தியபாமா எனது கவலைக்குக் காரணம் ஒரே ஒரு ஆசைதான். மிக நல்லவனான ஒரு பக்தன், எனக்கு உண்டு. என்னை காண வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

சத்தியபாமா- சுவாமீ! தாங்கள் தங்களது பக்தன் ஒருவனைக் காண
விரும்பினால் அவனை இங்கு வரவழைக்கலாம் அல்லது நாம் அவன் இருக்கும் இடம் சென்று காணலாம். இதைச் செய்யாமல் தாங்கள் கவலை அடைவது விநோதமாக இருக்கின்றது. தங்களது அந்தப் பக்தனது பெயர் யாது? அவன் எங்கே இருக்கின்றான்?

கண்ணன் - அவன் பெயர் அனுமன், இருக்குமிடம் கந்தமாதன பருவதத்தின் உச்சி. அவனுடைய உதவியால்தான் முன்பு இராமாவதாரத்தில் நான், இராவணனைச் சம்மாரம் செய்தேன் அவனுக்கு ஒரு விரதம் உண்டு, இராமர், சீதை ஆகிய இருவரை அன்றி யாவரையும் வணங்கமாட்டான். இராமரது உத்தரவுப்படிதான் எதையும் செய்வான். மற்ற யாவர் சொல்லையும் பொருட்படுத்தமாட்டான்.
நான் அவனைக் காண விரும்பினால், நான் இராமராக வடிவெடுக்க வேண்டும், இராமர் வடிவு எடுக்க என்னால் முடியும், சீதையாக வடிவு எடுப்பவர் யார்? என்றுதான் கவலை. நீயோ, ருக்மணியோ, யாரும் சீதையாக வடிவெடுக்க முடியாது என்னும் உறுதியான எண்ணம் என்றும் எனக்கு உண்டு.

சத்யபாமா சுவாமி! கவலையை விடுங்கள் நான் சீதை வடிவெடுத்துக் கொண்டு உங்கள் பக்கத்தில் அமர்வேன். இப்போதே அந்த அனுமானை அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள்.

பின்பு கண்ணபிரான் தம் திருவுள்ளத்தில் கருடனை நினைத்தார் உடனே கருடாழ்வார் சுவாமியிடம் வந்து வணங்கிப்பெருமானே அடியேன் செய்யும் பணியைத் திருவாய் மலர்ந்தருள வேண்டும்என்றார்.

கண்ணபிரான் 'இப்பொழுதே நீ கந்தமாதன பர்வதத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு நம்முடைய பக்தன் அனுமான் இருப்பான், அவனிடம் நீ ஒரு செய்தியைச் சொல்லி வர வேண்டும். ''துவாரகாபுரியில் இராமபிரானும் சீதாதேவியும் இருக்கின்றார்கள் அங்கு வரும்படி உத்தரவு. நீ உடனே புறப்பட்டு வருவாயாகஎன்று சொல்லிவிட்டு அவன் இங்கு வந்து சேர்வதற்கு முன், நீ இங்கு வந்து அவன் வருகையை எனக்கு அறிவிக்க வேண்டும் சென்று வா' எனக் கருடனை அனுப்பிவிட்டுச் "சுதரிசனம்'' என்னும் பெயருடைய சக்கரத்தாழ்வானைத் தம்மிடம் வரச்செய்து அதற்கும் ஒரு பணியைத் தருகிறார் 'சக்கராயுதமே! நீ நம் அரண்மனை முன்வாயிலுக்குச் செல். அங்குள்ள துவார பாலகர்களை வேறு வேலைக்குப் போகச் சொல்லிவிட்டு வாயிற் காவலளாக நீ இருக்க வேண்டும், சிறிது நேரத்தில் அனுமான் வருவான், அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, நீ, நம்மிடம் வந்து அனுமான் வருகையை அறிவித்துவிட்டுப் பின்பு முன்வாயிலுக்குப் போய் அவனை உள்ளே வரவிடு' என்று கூறி அனுப்பிவிட்டார்.

கந்தமாதனம் சென்ற கருடன், அங்கு இராமத் தியானத்தில் அமர்ந்திருந்த அனுமானைக் கண்டு இராமபிரான் சீதாதேவியாருடன் துவாரகையில் இருக்கின்றார். உன்னை அங்கு வரும்படி உத்தரவிட்டார் என்றது. ஆஞ்சனேயருக்கு வந்த மகிழ்ச்சியின் அளவை யாராலும் சொல்ல முடியாது. கருடனைக் கட்டித் தழுவி, இந்த ஆனந்தச் செய்தியைச் சொன்ன உனக்கு நான் செய்யும் கைமாறு எதுவுமே இல்லை. இதோ இந்தக் கனிகளை எல்லாம் சாப்பிடு, தேவாமிர்தம் போன்ற இந்தத் தீர்த்தத்தையும் சாப்பிடு, என அன்போடு உபசரித்தார் பின்பு கருடன் 'ஆஞ்சனேயா! புறப்படு நாம் இருவரும் துவாரகை செல்வோம்' என்றது, 'நீ செல், பின்னால் நான் வருகிறேன்' என்று கருடனை அனுப்பிவிட்டார் ஆஞ்சநேயர்.

  பதுமாசனமிட்டு அமர்ந்தார் ஆஞ்சநேயர் ராம் ராம் எனச் சிந்தித்தார். அடுத்த கணம் துவாரகை அரண்மனை வாயிலில் இருந்தார். அங்கு காவலாயுள்ள சக்ராயுதத்தைப் பார்த்து 'எம்பெருமான் எங்கிருக்கின்றார் சீக்கிரம் சொல்' என்றார். 'அனுமானே! அவசரப்பட வேண்டாம், இங்கு உட்கார், உனது வரவைப் பிரானிடம் அறிவித்துவிட்டுப் பின்பு வந்து உன்னை அவரிடம் அழைத்துப் போகின்றேன்' என்றது.

சக்கரத்தாழ்வார் சொன்ன சொற்களை ஒரு பொருளாகவே மதிக்காத ஆஞ்சநேயர் தமது இடது கையால் சக்கரத்தைப் பிடித்தார். அவ்வளவுதான், சக்கராயுதத்தின், ஆற்றல், வீரம், எல்லாம் அடங்கிப் போனது. பொன்னால் ஆன ஒரு கங்கணம் போல, ஜடப் பொருளாக மாறிவிட்டது. ஆஞ்சநேயர் அதைத் தமது வலது கையில் கோர்த்துக் கொண்டார். பின்பு அரண்மனைக்குள் செல்கின்றார்.

அரண்மனை முகப்பு வாயிலில் இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைக் கேட்டவுடன் கண்ணபிரான் ராமராக வடிவெடுத்துக் கொள்ள, சீதையாக வடிவெடுத்துக் கொள்வேன் என முன்பு கூறியிருந்த சத்தியபாமா சீதாதேவியின் வடிவு எடுக்க முடியாமல் அரண்மனைக்குள் அங்குமிங்கும் அலைகிறார். இதைக் கண்ட பெருமான் ருக்மணி தேவியைச் சீதைவடிவெடுத்துக்கொண்டு வருமாறு அருள் புரிகிறார். அப்படி வந்த சீதாதேவியைத் தன் பக்கத்தில் இருக்கச் செய்கிறார்.

அரண்மனையுள் புகுந்த ஆஞ்சநேயர், சீதாபிராட்டி சமேதராக இராமபிரான் எங்கேயுள்ளார் என்று தேடி வந்து ஜானகி ராமரைத் தெரிசிக்கிறார். சாஷ்டாங்கமாகக் கீழ்வீழ்ந்து வணங்குகிறார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது. எழுந்து தம் சிரசின் மேல் இருகரங்களையும் கூப்பி நின்று கொண்டு 'எம்பெருமானே! அடியேன், திருவடிகளுக்குச் செய்ய வேண்டிய, பணி இது எனத் திருவாய் மலர்ந்தருள வேண்டும். கணநேரத்தில் அதை முடித்துக் கொண்டு அடியேன் வர அருள வேண்டும்' என்று கூறுகின்றார்.

இராமபிரான்எனது அன்புக்குரிய அனுமானே! நீ நன்றாகச் சௌக்கியமாக இருக்கின்றாயா?'' எனத் திருவாய் மலர்ந்தருளித் தம்முடைய செந்தாமரைக் கரத்தால் அனுமனை கையைப் பிடித்து இழுத்துத் தம் பக்கத்தில் அமர்த்திக் கொள்கிறார். அனுமாருடைய முதுகைத் தம் திருக்கரத்தால் பல தடவை தடவிக் கொடுக்கிறார். சீதாபிராட்டியார், தேவாமிர்தத்தை விட மேலான பக்ஷணங்களை ஆஞ்சநேயர் சாப்பிடக் கொடுக்கிறார். அந்த பிரசாதத்தை ஆர்வமுடன் அருந்துகிறார் ஆஞ்சநேயர்.

பின்பு இராமபிரான்ஆஞ்சநேயா! உன்னைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது உன்னைப் பார்க்க விரும்பித்தான் உன்னை இங்கு அழைத்தது, வேறு காரியம் எதுவும் இல்லை . நீ சுகமாக உனது இருப்பிடமாகிய கந்தமாதன பர்வதம் செல்வாயாக!' என விடை கொடுத்து அனுப்புகிறார். பிரியா விடை பெற்ற ஆஞ்சநேயர், அரண்மனையை விட்டு வெளியே வரும் போது, நமது கையில் கங்கணமாகக் கிடக்கும் சக்கராயுதத்தை, வாயில் காவலாக இருக்கும் படி முன்பு அது இருந்த இடத்திலேயே வைத்து விட்டுச் சென்றுவிடுகிறார்.

இப்போதுதான் கருடாழ்வார் கண்ணபிரானிடம் வந்து வணங்கி நிற்கிறார். கருடனைப் பார்த்துப் பெருமான்என்ன? அனுமான் வருகின்றானா?” எனக் கேட்கிறார். மூக்கரையன் ஒருவனுக்குக் கண்ணாடியை முகத்துக்கு முன் காட்டுவது போலிருந்தது பெருமான் கேட்டது.

சத்தியபாமா, கருடன், சக்கராயுதம் ஆகிய மூவரும், தங்களது ஆணவத்தைப் போக்கக் கண்ணபிரான் செய்தது இந்தத் திருவிளையாடல் என்று நினைந்து அன்று முதல் சாந்தம், பணிவு, அடக்கம் முதலான நற்குணங்களுடன் வாழ்கின்றார்கள்.

கந்தமாதனம் சென்ற ஆஞ்சநேயர் முன்பு போல அங்கேயே இராமத் தியானம் செய்து கொண்டு, இக்காலத்தும் அங்கு வாழ்கின்றார்.

கண்ணன்விரும்பி ராமனுருக் காட்சி அளிக்கும் படி அவன்தன்
கருணைக்கிலக்காய் விளக்கி அகம் கவினும் மனத்துக் கருடன்ஒல்க நண்ணந்தர வீதியில் விரைவாய் நடந்துசுதரி சனப் படையை
நலம்சேர் கர புடணமாக்கி, நாடு முருக்குமணி சீதை
வண்ணம் பொலி கோலம் சமைந்து வழங்கும் உணவு புசித்துவக்கும்
மகிமை அநுமப் பெயர்ப் பெரியோன் வாழ்வெற்கமையைப்
                                                                               பணிப்பாயோ?
எண்ணம் பொலி மெய்க் கவுமாரர் இனம்சேர் சிரவணப்பதியாய்
இராமனந்தப் பெயர்கொடென் திதயத் திலங்கும் பெருமாளே.

அடுத்த பதிவில் விபீடண கதி...
கொங்கு நாட்டுக் கச்சியப்பர் என்றழைக்கப்பட்ட சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம் அருள்திரு. கந்தசாமி சுவாமிகள் அருளிய பக்தமான்மியம்

இதில் 104 வைணவ அடியார்களின் சரித்திரம் உள்ளது. 7373 பாடல்கள். இந்தப் பக்தர்களின் அருள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களைச் சுருக்கமாக வசன நடையில் எழுதினால் அன்பர்கள் பலரும் படித்துப் பயன்பெற வாய்ப்பாக இருக்கும் என்னும் எண்ணத்தால் இது எழுதப் பெறுகிறது.
தவத்திரு தம்பி சுவாமிகள் (எ) மருதாசல சுவாமிகள்,
கௌமார மடாலயம் (கெளமார அமுதம் மாதாந்திர இதழில் வெளிவந்த
கட்டுரைகளின் தொகுப்பு)

No comments:

Post a Comment