Tuesday, July 30, 2019

விபீடண கதி | தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் அருளிய பக்தமான்மியம் | 104 வைணவ அடியார்களின் சரித்திரம்

வைணவ அடியார்களின் அருள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்கள் சுருக்கமாக வசன நடையில்...
விபீடணர்
இலங்கையை ஆட்சி செய்த இராவணனது தம்பியாகத் தோன்றிய விபீடணர், அரக்கர் குலத்துக்குண்டான, தீய பண்புகள் சிரிதும் இன்றி மிகமிக நல்லவராக இருந்தார். சீதாபிராட்டியாரை இராவணன் கவர்ந்து, வந்த போது 'இது மிகக் கெட்ட செயல், மகாபாபம், நம் குலமே அழிந்துவிடும். சீதாதேவியைக் கொண்டு போய் இராமரிடமே விட்டு விட்டு, மன்னிப்புக் கேட்பதுதான் நல்லது.' எனப் பலவாறு புத்திமதி சொன்னார் விபீடணர் அவற்றை ஏற்றுக் கொள்ளாத இராவணன், நிந்தித்து இகழ்ந்து, எனக்குப் புத்திமதி சொல்லும் அளவுக்கு, நீ உயர்ந்து விட்டாயா? எதிரில் நில்லாது போய்விடு, நின்றால் எனது கோபத்துக்கு இரையாகி விடுவாய் எனக் கடுமையாக்க் கூறினான். அவற்றை எல்லாம் பொறுத்துக் கொள்கிறார் தருமமே உருவான விபீடணர் இலங்கை அரக்கர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக உள்ள எல்லா நற்பண்புகளும் ஒன்று சேர்ந்து உருவானது போன்றவர்' விபீடணர் - சீதாதேவியைத் தேடி இலங்கையில் அசோக வனத்துக்கு வந்த அனுமார், அசோக வனத்தையும், தன்னை எதிர்த்த அசுரர்கள் பலரையும், அழிக்கிறார் முடிவில் இராவணன் மகனான இந்திரசித்து வந்து பிரம்மாஸ்த்திரத்தால் அனுமாரை மயக்கிக் கட்டிக் கொண்டுபோய் இராவணனிடம் விடுகிறான். அவன், அனுமாரைப் பார்த்து “யாரடா? குரங்கே நீ' என்று கேட்க 'இராமசாமி தூதன் நானடா அடே ராவணா - இராமசாமி தூதன் நானடா' என்கிறார். கோபம் மிகுந்த ராவணன், அனுமாரைக் கொன்று விடும்படி உத்தரவிடுகிறான். அப்போது தர்மமே உருவான விபீடணர் 'அண்ணா! தூதனாக வந்தவனைக் கொல்வது அரச தர்மம் அல்ல, ' என்று அரசநீதியை எடுத்துச் சொல்லி அனுமாரைக் காத்தவர். இவருடைய பெருமைகளை, எல்லாம் வான்மீகி முனிவர் இராமாயணத்தில் பல சுலோகங்களில் கூறியுள்ளார். இவர் செய்த பல அற்புதச் செயல்களில் ஒன்றை மட்டும் இங்குக் காண்போம்.'


திருவெண்காடர் ஆகிய பட்டினத்தார் எப்படிப் பெரிய கப்பல் வியாபாரியாய் இருந்தாரோ; அவரைப் போன்ற செல்வமுள்ள ஒரு வணிகன், தனது கப்பல் நிறையச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு வேறு ஒரு நாட்டுக்குக் கடற்பயணம் செல்கிறான். வேறு சில வியாபாரிகளும் செல்கின்றனர். 'கடலில் கொஞ்ச தூரம் போன போது புயலால் கடல் கொந்தளித்துக் கப்பல் கவிழ்ந்துவிடும் நிலைமைக்கு வருகின்றது. அனைவரும் மிகுந்த பயம் அடைகின்றனர். அந்த வணிகன், 'கப்பல் மூழ்கிவிடாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களில் யாராவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள்' எனக் கேட்கிறான், ஒரு வியாபாரி சொல்கின்றார் 'இந்தக் கடலுக்கு இப்போது ஒரு நரபலி கொடுத்துவிட்டால், வரும் ஆபத்திலிருந்து தப்பலாம்'

அந்த வணிகன் நினைக்கின்றான் = 'நீ கடலுக்கு பலியாகு' என்று யாரைச் சொல்ல முடியும், சொன்னால் யார் கேட்பார்கள் ஆதலால் நானே பலியாகி விடுவது தான் நடக்கும் காரியம் என எண்ணி, மற்றவர்களிடம் சொல்கின்றான், = தோழர்களே! நானே கடற்பலி ஆகின்றேன் கப்பல் நலம் அடைந்தால் அதையும் அதில் உள்ள பொருட்களையும் எனது மகனிடம் ஒப்புவித்து விடுங்கள் என்றான். அப்போது அந்த வணிகனது ஆட்களில், வயதான ஒருவன் நோயாளியும் கூட, அவன் சொல்கின்றான் முதலாளி, எனக்கு வயதும் அதிகம் ஆகிவிட்டது. உடலில் பற்பல நோய்களும் உள்ளது நான் இனி உலகில், இருந்து என்ன செய்யப் போகின்றேன் யானே கடற்பலி ஆகிவிடுகின்றேன். நீங்கள் எல்லாம் நலமாக வாழுங்கள் என்று சொல்லிவிட்டு 'ஓ கடல் தெய்வமே என் உயிரைப் பலியாக ஏற்றுக் கொண்டு கப்பலையும் அதில் உள்ளவர்களையும் காப்பாற்றுவாயாக என்று கூறிக்கொண்டே கடலில் குதித்து விடுகிறான்.

சிறிது நேரத்தில் கடல் அலைகளின் வேகம் குறைந்து கப்பல் நிலை பெற்று நன்றாகச் செல்கின்றது. கடலில் குதித்தவன் நீர் மட்டத்துக்கு மேலே வந்த போது எங்கிருந்தோ மிதந்து வந்த ஒரு மரத்துண்டு அவன் கைக்குக் கிடைத்துவிடுகிறது. அதைப் பற்றிக் கொண்டு மிதக்கிறான். அலை அவனை இலங்காபுரியின் கடற்கரையில் ஒதுக்கிவிடுகிறது.

இராவண சம்மாரத்துக்குப் பின் இலங்காபுரியை விபீடணருக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் இராமபிரான். இலங்கையை விபீடணர் ஆண்டு கொண்டிருக்கின்றார்; கடற்கரையில் அலைகளால் - ஒதுக்கப்பட்ட அந்த மனிதனைக் கண்ட அரக்கர்கள், அவனை அழைத்துக் கொண்டு போய் தங்களது அரசராகிய விபீடணரிடம் விடுகின்றனர்.
அந்த மனிதனைக் கண்டவுடன் விபீடணருக்கு இராமபிரானது நினைவு வந்துவிடுகிறது. இராமரைக் கண்டது போலவே ஆனந்தம் அடைகிறார். அவனுக்கு வேண்டிய உணவு, உடை முதலியவற்றைக் கொடுத்து நீ, இங்கேயே இருந்துவிடு அரண்மனையில் உனக்கு எல்லா வசதியும் செய்து தருவார்கள் என்றார். அவன் சொல்கின்றான் - அரசே! நான் ஒரு வியாபாரக் கப்பலிலிருந்து தவறி வீழ்ந்தவன், என்னை மீண்டும் அந்தக் கப்பலுக்கே அனுப்பி வைத்தீர்கள் என்றால் மனமகிழ்ச்சி அடைவேன்.
ஏராளமான பொன்னும் மணியும் ஒரு பையில் போட்டு அவனது இடுப்பில் கட்டிவிட்டு இராம் இராம் எனத் தம் கைப்பட ஒரு ஒலையில் ராமமந்திரத்தை எழுதி, அந்த ஓலையை அவனது நெற்றியில் கட்டிக் கடற்கரைக்கு அழைத்துச் சென்று 'நீ, எங்கே போகவேண்டுமென்று விரும்புகிறாயோ, உன்னை, அங்கே கொண்டு போய்ச் சேர்க்கும் இந்த ராம நாம ரட்சை' என்று சொல்லிக் கடலில் அவனை விடுகிறார், நெடுந்தூரத்தில் போய்க் கொண்டிருக்கும் அந்தக் கப்பலுக்குப் பக்கத்தில் போய் விடுகிறான் அந்த மனிதன். “கப்பலில் உள்ளவர்கள் அவனை எடுத்து தம்முடன் இருக்க வைத்துக் காலையில் கடலில் குதித்து நீ, உயிர் பிழைத்து எப்படி இங்கு கப்பலுக்குச் சமீபமாக வந்தாய் ஆச்சரியமாக இருக்கின்றதே!'' எனக் கேட்கின்றனர்.
கப்பலும், அதில் உள்ள நீங்களும், பிழைக்க வேண்டி என் உயிரைத் தியாகம் செய்யக் கடலில் நான் குதித்த போது, ராம், ராம், என ராம மந்திரத்தைச் சொல்லியதால், அந்த இராமபிரானுடைய கருணையினால், அலை என்னை இலங்கைக் கடற்கரையில் ஒதுக்கியது என்று இலங்கையில் விபீடணர் செய்தவை எல்லாம் கூறி, அவர் கைகளால் தொட்டதால் எனது உடலில், இருந்த சகல ரோகங்களும் நீங்கிவிட்டது அவருடைய அருட்சித்தியின் பெருமைதான் எல்லாம்
மற்றவர்கள் உய்ய வேண்டித் தம் உயிரையும் தியாகம் செய்யும் உத்தமர்களுக்கு, மறுமையில் அன்றி, இம்மையிலேயே சகல நலமும் உண்டாகும் என்பதற்கு இந்தச் சரித்திரம் ஒரு சான்றாக உள்ளது.
அல்லல் அருளாள்வார்க் கில்லைவளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி - திருக்குறள்
"அல்லல், மெய் அருள் ஆள்பவர்க்கு இல்லையே ஆகும
மல்லல் ஞாலமே கரி, என வழுத்து அருமறையின் சொல்,
அன்போடு யாவரும் நிசமே எனச் சூழ்ந்து ,
வல்லவா, முயன்றிடற்கு இஃதோர் சாட்சி ஆம், மதிக்கின்”
சீதாபதியாம் இராகவன்தன், திருத்தாமரைத்
தாள்த்துணை இறைஞ்சித்,
தீயகுண ராவணன் உறவு, சிறிதும்
உதவாது என அகற்றி,
மாதா அனைய கருணைமிக மருவித்
தொழுநோயினன், கடலில்
மரணம் உற எண்ணுபு வீழ்கால்,
மகத்து ஆம் ராமப் பெயர்சொல்லால்
தீது, ஆராமல் அலை இலங்கை சேர்க்க,
அவனை உபசரித்துச்
செங்கை இணையால்த் தொட்டு, அன்னோன்,
செயிர்நோய் அகலத் தீர்த்து அனுப்பி
ஏதாலும் தன்புகழ் அழியா, எழில் வீடணன்
போன்று எனைப் புரப்பாய்
இராமாநந்தப் பெயர்கொடு எனது
இதயத்து இலங்கும் பெருமாளே
அடுத்த பதிவில் சபரி கதி...
கொங்கு நாட்டுக் கச்சியப்பர் என்றழைக்கப்பட்ட சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம் அருள்திரு. கந்தசாமி சுவாமிகள் அருளிய பக்தமான்மியம்
இதில் 104 வைணவ அடியார்களின் சரித்திரம் உள்ளது. 7373 பாடல்கள். இந்தப் பக்தர்களின் அருள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களைச் சுருக்கமாக வசன நடையில் எழுதினால் அன்பர்கள் பலரும் படித்துப் பயன்பெற வாய்ப்பாக இருக்கும் என்னும் எண்ணத்தால் இது எழுதப் பெறுகிறது.
தவத்திரு தம்பி சுவாமிகள் (எ) மருதாசல சுவாமிகள்,
கௌமார மடாலயம் (கெளமார அமுதம் மாதாந்திர இதழில் வெளிவந்த
கட்டுரைகளின் தொகுப்பு)


No comments:

Post a Comment