சிரவை ஆதீனம்
Friday, October 11, 2019
Tuesday, August 6, 2019
Tuesday, July 30, 2019
விபீடண கதி | தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் அருளிய பக்தமான்மியம் | 104 வைணவ அடியார்களின் சரித்திரம்
வைணவ அடியார்களின் அருள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்கள் சுருக்கமாக வசன நடையில்...
விபீடணர்
இலங்கையை ஆட்சி செய்த இராவணனது தம்பியாகத் தோன்றிய விபீடணர், அரக்கர் குலத்துக்குண்டான, தீய பண்புகள் சிரிதும் இன்றி மிகமிக நல்லவராக இருந்தார். சீதாபிராட்டியாரை இராவணன் கவர்ந்து, வந்த போது 'இது மிகக் கெட்ட செயல், மகாபாபம், நம் குலமே அழிந்துவிடும். சீதாதேவியைக் கொண்டு போய் இராமரிடமே விட்டு விட்டு, மன்னிப்புக் கேட்பதுதான் நல்லது.' எனப் பலவாறு புத்திமதி சொன்னார் விபீடணர் அவற்றை ஏற்றுக் கொள்ளாத இராவணன், நிந்தித்து இகழ்ந்து, எனக்குப் புத்திமதி சொல்லும் அளவுக்கு, நீ உயர்ந்து விட்டாயா? எதிரில் நில்லாது போய்விடு, நின்றால் எனது கோபத்துக்கு இரையாகி விடுவாய் எனக் கடுமையாக்க் கூறினான். அவற்றை எல்லாம் பொறுத்துக் கொள்கிறார் தருமமே உருவான விபீடணர் இலங்கை அரக்கர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக உள்ள எல்லா நற்பண்புகளும் ஒன்று சேர்ந்து உருவானது போன்றவர்' விபீடணர் - சீதாதேவியைத் தேடி இலங்கையில் அசோக வனத்துக்கு வந்த அனுமார், அசோக வனத்தையும், தன்னை எதிர்த்த அசுரர்கள் பலரையும், அழிக்கிறார் முடிவில் இராவணன் மகனான இந்திரசித்து வந்து பிரம்மாஸ்த்திரத்தால் அனுமாரை மயக்கிக் கட்டிக் கொண்டுபோய் இராவணனிடம் விடுகிறான். அவன், அனுமாரைப் பார்த்து “யாரடா? குரங்கே நீ' என்று கேட்க 'இராமசாமி தூதன் நானடா அடே ராவணா - இராமசாமி தூதன் நானடா' என்கிறார். கோபம் மிகுந்த ராவணன், அனுமாரைக் கொன்று விடும்படி உத்தரவிடுகிறான். அப்போது தர்மமே உருவான விபீடணர் 'அண்ணா! தூதனாக வந்தவனைக் கொல்வது அரச தர்மம் அல்ல, ' என்று அரசநீதியை எடுத்துச் சொல்லி அனுமாரைக் காத்தவர். இவருடைய பெருமைகளை, எல்லாம் வான்மீகி முனிவர் இராமாயணத்தில் பல சுலோகங்களில் கூறியுள்ளார். இவர் செய்த பல அற்புதச் செயல்களில் ஒன்றை மட்டும் இங்குக் காண்போம்.'
திருவெண்காடர் ஆகிய பட்டினத்தார் எப்படிப் பெரிய கப்பல் வியாபாரியாய் இருந்தாரோ; அவரைப் போன்ற செல்வமுள்ள ஒரு வணிகன், தனது கப்பல் நிறையச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு வேறு ஒரு நாட்டுக்குக் கடற்பயணம் செல்கிறான். வேறு சில வியாபாரிகளும் செல்கின்றனர். 'கடலில் கொஞ்ச தூரம் போன போது புயலால் கடல் கொந்தளித்துக் கப்பல் கவிழ்ந்துவிடும் நிலைமைக்கு வருகின்றது. அனைவரும் மிகுந்த பயம் அடைகின்றனர். அந்த வணிகன், 'கப்பல் மூழ்கிவிடாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களில் யாராவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள்' எனக் கேட்கிறான், ஒரு வியாபாரி சொல்கின்றார் 'இந்தக் கடலுக்கு இப்போது ஒரு நரபலி கொடுத்துவிட்டால், வரும் ஆபத்திலிருந்து தப்பலாம்'
அந்த வணிகன் நினைக்கின்றான் = 'நீ கடலுக்கு பலியாகு' என்று யாரைச் சொல்ல முடியும், சொன்னால் யார் கேட்பார்கள் ஆதலால் நானே பலியாகி விடுவது தான் நடக்கும் காரியம் என எண்ணி, மற்றவர்களிடம் சொல்கின்றான், = தோழர்களே! நானே கடற்பலி ஆகின்றேன் கப்பல் நலம் அடைந்தால் அதையும் அதில் உள்ள பொருட்களையும் எனது மகனிடம் ஒப்புவித்து விடுங்கள் என்றான். அப்போது அந்த வணிகனது ஆட்களில், வயதான ஒருவன் நோயாளியும் கூட, அவன் சொல்கின்றான் முதலாளி, எனக்கு வயதும் அதிகம் ஆகிவிட்டது. உடலில் பற்பல நோய்களும் உள்ளது நான் இனி உலகில், இருந்து என்ன செய்யப் போகின்றேன் யானே கடற்பலி ஆகிவிடுகின்றேன். நீங்கள் எல்லாம் நலமாக வாழுங்கள் என்று சொல்லிவிட்டு 'ஓ கடல் தெய்வமே என் உயிரைப் பலியாக ஏற்றுக் கொண்டு கப்பலையும் அதில் உள்ளவர்களையும் காப்பாற்றுவாயாக என்று கூறிக்கொண்டே கடலில் குதித்து விடுகிறான்.
சிறிது நேரத்தில் கடல் அலைகளின் வேகம் குறைந்து கப்பல் நிலை பெற்று நன்றாகச் செல்கின்றது. கடலில் குதித்தவன் நீர் மட்டத்துக்கு மேலே வந்த போது எங்கிருந்தோ மிதந்து வந்த ஒரு மரத்துண்டு அவன் கைக்குக் கிடைத்துவிடுகிறது. அதைப் பற்றிக் கொண்டு மிதக்கிறான். அலை அவனை இலங்காபுரியின் கடற்கரையில் ஒதுக்கிவிடுகிறது.
இராவண சம்மாரத்துக்குப் பின் இலங்காபுரியை விபீடணருக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் இராமபிரான். இலங்கையை விபீடணர் ஆண்டு கொண்டிருக்கின்றார்; கடற்கரையில் அலைகளால் - ஒதுக்கப்பட்ட அந்த மனிதனைக் கண்ட அரக்கர்கள், அவனை அழைத்துக் கொண்டு போய் தங்களது அரசராகிய விபீடணரிடம் விடுகின்றனர்.
அந்த மனிதனைக் கண்டவுடன் விபீடணருக்கு இராமபிரானது நினைவு வந்துவிடுகிறது. இராமரைக் கண்டது போலவே ஆனந்தம் அடைகிறார். அவனுக்கு வேண்டிய உணவு, உடை முதலியவற்றைக் கொடுத்து நீ, இங்கேயே இருந்துவிடு அரண்மனையில் உனக்கு எல்லா வசதியும் செய்து தருவார்கள் என்றார். அவன் சொல்கின்றான் - அரசே! நான் ஒரு வியாபாரக் கப்பலிலிருந்து தவறி வீழ்ந்தவன், என்னை மீண்டும் அந்தக் கப்பலுக்கே அனுப்பி வைத்தீர்கள் என்றால் மனமகிழ்ச்சி அடைவேன்.
ஏராளமான பொன்னும் மணியும் ஒரு பையில் போட்டு அவனது இடுப்பில் கட்டிவிட்டு இராம் இராம் எனத் தம் கைப்பட ஒரு ஒலையில் ராமமந்திரத்தை எழுதி, அந்த ஓலையை அவனது நெற்றியில் கட்டிக் கடற்கரைக்கு அழைத்துச் சென்று 'நீ, எங்கே போகவேண்டுமென்று விரும்புகிறாயோ, உன்னை, அங்கே கொண்டு போய்ச் சேர்க்கும் இந்த ராம நாம ரட்சை' என்று சொல்லிக் கடலில் அவனை விடுகிறார், நெடுந்தூரத்தில் போய்க் கொண்டிருக்கும் அந்தக் கப்பலுக்குப் பக்கத்தில் போய் விடுகிறான் அந்த மனிதன். “கப்பலில் உள்ளவர்கள் அவனை எடுத்து தம்முடன் இருக்க வைத்துக் காலையில் கடலில் குதித்து நீ, உயிர் பிழைத்து எப்படி இங்கு கப்பலுக்குச் சமீபமாக வந்தாய் ஆச்சரியமாக இருக்கின்றதே!'' எனக் கேட்கின்றனர்.
கப்பலும், அதில் உள்ள நீங்களும், பிழைக்க வேண்டி என் உயிரைத் தியாகம் செய்யக் கடலில் நான் குதித்த போது, ராம், ராம், என ராம மந்திரத்தைச் சொல்லியதால், அந்த இராமபிரானுடைய கருணையினால், அலை என்னை இலங்கைக் கடற்கரையில் ஒதுக்கியது என்று இலங்கையில் விபீடணர் செய்தவை எல்லாம் கூறி, அவர் கைகளால் தொட்டதால் எனது உடலில், இருந்த சகல ரோகங்களும் நீங்கிவிட்டது அவருடைய அருட்சித்தியின் பெருமைதான் எல்லாம்
மற்றவர்கள் உய்ய வேண்டித் தம் உயிரையும் தியாகம் செய்யும் உத்தமர்களுக்கு, மறுமையில் அன்றி, இம்மையிலேயே சகல நலமும் உண்டாகும் என்பதற்கு இந்தச் சரித்திரம் ஒரு சான்றாக உள்ளது.
அல்லல் அருளாள்வார்க் கில்லைவளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி - திருக்குறள்
"அல்லல், மெய் அருள் ஆள்பவர்க்கு இல்லையே ஆகும
மல்லல் ஞாலமே கரி, என வழுத்து அருமறையின் சொல்,
அன்போடு யாவரும் நிசமே எனச் சூழ்ந்து ,
வல்லவா, முயன்றிடற்கு இஃதோர் சாட்சி ஆம், மதிக்கின்”
சீதாபதியாம் இராகவன்தன், திருத்தாமரைத்
தாள்த்துணை இறைஞ்சித்,
தீயகுண ராவணன் உறவு, சிறிதும்
உதவாது என அகற்றி,
மாதா அனைய கருணைமிக மருவித்
தொழுநோயினன், கடலில்
மரணம் உற எண்ணுபு வீழ்கால்,
மகத்து ஆம் ராமப் பெயர்சொல்லால்
தீது, ஆராமல் அலை இலங்கை சேர்க்க,
அவனை உபசரித்துச்
செங்கை இணையால்த் தொட்டு, அன்னோன்,
செயிர்நோய் அகலத் தீர்த்து அனுப்பி
ஏதாலும் தன்புகழ் அழியா, எழில் வீடணன்
போன்று எனைப் புரப்பாய்
இராமாநந்தப் பெயர்கொடு எனது
இதயத்து இலங்கும் பெருமாளே
அடுத்த பதிவில் சபரி கதி...
கொங்கு நாட்டுக் கச்சியப்பர் என்றழைக்கப்பட்ட சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம் அருள்திரு. கந்தசாமி சுவாமிகள் அருளிய பக்தமான்மியம்
இதில் 104 வைணவ அடியார்களின் சரித்திரம் உள்ளது. 7373 பாடல்கள். இந்தப் பக்தர்களின் அருள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களைச் சுருக்கமாக வசன நடையில் எழுதினால் அன்பர்கள் பலரும் படித்துப் பயன்பெற வாய்ப்பாக இருக்கும் என்னும் எண்ணத்தால் இது எழுதப் பெறுகிறது.
தவத்திரு தம்பி சுவாமிகள் (எ) மருதாசல சுவாமிகள்,
கௌமார மடாலயம் (கெளமார அமுதம் மாதாந்திர இதழில் வெளிவந்த
கட்டுரைகளின் தொகுப்பு)
Monday, July 15, 2019
அனுமார் கதி | தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் அருளிய பக்தமான்மியம் | 104 வைணவ அடியார்களின் சரித்திரம்
வைணவ அடியார்களின் அருள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்கள் சுருக்கமாக வசன நடையில்...
அனுமார்
அயோத்தியை ஆண்ட தசரதச் சக்ரவர்த்தியின் திருமகனாக அவதரித்துப் பிதுர்வாக்கிய பரிபாலனஞ் செய்யப் பதினான்கு வருடம் சீதா பிராட்டியாருடன், இலக்குவனும் உடன்வர, வனவாசம் செய்கிறான் இராமன். பஞ்சவடியில் தங்கியிருந்த போது சீதா பிராட்டியாரை இராவணன் கவர்ந்து செல்ல, அவனைச் சங்கரித்துச் சீதாதேவியாரை மீட்க, வானரச் சேனைகளுடன் இலங்கைக்குச் செல்லக் கடலணை செய்யக் கடற்கரையில் நின்று கொண்டிருக்கின்றார்.
இராவணன் சீதாபிராட்டியாரைக் கவர்ந்து வந்ததை அறிந்த, அவனது தம்பியாகிய விபீடணர் 'அண்ணா ' இது மிக மிகப் பாபச் செயல், இதனால் நம் குலமே அடியோடு நசிந்துவிடும். சீதா தேவியாரை இராமரிடமே கொண்டு போய் விடுவது தான் நமக்கு நல்லது எனப் பலவாறு புத்திமதி சொல்ல, அழிவுகாலம் நெருங்கிவிட்ட இராவணன் தம்பியின் சொல்லை ஏற்றுக் கொள்ளாது கோபித்து நிந்தனை செய்து, 'நீயா எனக்குப் புத்தி சொல்பவன் எதிரில் நில்லாதே போய்விடு' எனச் சீறுகிறான். மனம் நொந்த விபீடணர் இராவணனைப் பிரிந்து வந்து, இராமரையே சரணாகதியடைகிறர். விலையுயர்ந்த மணிமாலை ஒன்றை இராமபிரான் கரத்தில் தந்து விட்டு அவரை வணங்குகிறார். விபீடணருக்கு அபயம் தந்து அவரது சரணாகதியை ஏற்றுக் கொள்கிறார்.
விபீடணர் தந்த மணிமாலையைத் தம் சமீபத்தில் நிற்கும், ஆஞ்சனேயரது கழுத்தில் அணிவிக்கிறார் பெருமான். அந்த மாலையில் உள்ள மணிகளை ஒவ்வொன்றாக விரல்களால் நகர்த்திப் பார்த்த ஆஞ்சனேயர் ஒரு மணியைத் தம் பற்களால் கடித்துப் பார்த்துப் பின் மாலையைத் தம் கழுத்திலிருந்து எடுத்துத் தூரவீசியெறிகிறார். இதனைக் கண்ட அங்குள்ள அனைவரும் (இராமரைத் தவிர) குலத்தளவே ஆகும் குணம் என்னும் மொழி மிக மிக உண்மையே. குரங்கின் கைப் பூமாலை என்பது போல மணிமாலை ஆகிவிட்டது; எனச் சிரித்து இகழ்ந்து பேசுகிறார்கள். உடனே ஆஞ்சனேயர் தாம் செய்த இச்செயலுக்கு விளக்கம் தருகிறார். இராமபிரானை யாரொருவர் உள்ளத்தே கொள்ளாதிருக்கின்றாரோ அவர்களையும், எந்தப் பொருளில் ராமநாம முத்திரை இல்லையோ அந்தப் பொருளையும் என் மனம் ஏற்றுக்
கொள்ளாது யாவர்க்கும் அவரவர் உடல் மீது அபிமான அன்பு இருக்கும், எனது உடல் மீது எனக்கும் அபிமானம் உண்டு அதில் ராமநாம் முத்திரை
இருப்பதால் இதோ பாருங்கள் எனத் தமது திருமேனியைக் காட்டினார் உடலின் எல்லாப்
பகுதிகளிலும் இராம் இராம் என்னும் மந்திரம், எல்லார் கண்களுக்கும் தோன்றுகிறது பின்பு
தான் ஆஞ்சனேயர் பெருமை அனைவர்க்கும் தெரிகிறது.
ஆஞ்சநேயர் செய்த மாபெருங் காரியங்கள் ஏராளம் அவற்றையெல்லாம் சொல்லி முடிக்க யாவராலும் முடியாது. இராமபிரானும் சுக்ரீவனும் நண்பராகும்படி செய்ததும், கடலைத் தாண்டிச் சீதா பிராட்டியாரைத் தேடிச் சென்று, இலங்கையில் அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த பிராட்டியாரைக் கண்டு அவருக்கு, இராமரது கணையாழியைக் கொடுத்ததும், அட்சகுமாரன் முதலான பல அரக்கர்களை அழித்ததும், தமது வாலில் இராவணன் இட்ட தீயைக் கொண்டே இலங்கையை எரித்ததும், மீண்டு வந்து கடலில் சேது செய்து வானர சேனைகளை எல்லாம் இலங்கைக்குள் செல்லச் செய்ததும், சஞ்சீவி பர்வதத்தைக் கொண்டு வந்து இலக்குமணனைப் பிழைக்க வைத்ததும்
முதலான பற்பல வீரதீரச் செயல்கள் அளவிலாதன.
துவாரகையைக் கண்ணபிரான் ஆட்சி செய்து கொண்டிருக்கும் காலத்தில் தேவலோகத்திலுள்ள பாரிசாத மலரைக் கொண்டுவந்தார். தமது பட்டமகிஷிகள் எட்டு பேர்களிலும், தமது அன்பு மிக்க சத்தியபாமாவுக்கு அந்த மலரைத் தந்தார். அதைச் சூடிக் கொண்ட சத்யபாமாவுக்கு எட்டு மங்கையர்களிலும் கண்ணபிரானுக்கு உவப்பானவள் தானே என எண்ணி அகங்காரம் கர்வம் அதிகரித்தது. அந்தக் காலகட்டத்திலேயே தனக்கு
மிஞ்சி வேகமாகச் செல்லக் கூடியவர் உலகில் எங்கும் இல்லை என்னும் எண்ணம் கருடாழ்வாருக்கு உண்டாகி அவருக்கும் கர்வம் அதிகரித்தது. சக்கரத்தாழ்வாராகிய சக்கரப்படைக்கும் ஆற்றலில் தன்னைப் போன்றவர் யாரும் இல்லை என்னும் மமதை உண்டாகியிருந்தது. வாணாசுரனது ஆயிரம் கைகளையும் ஒரு நொடியில் அறுத்தெறிந்தது, துர்வாச முனிவரை ஓட ஓட விரட்டியது போன்ற செயல்களை நினைந்து
கர்வம் கொண்டிருந்தது.
இப்படி மூவரும் தம்மைத்
தாமே பெரியோன் என மதித்துக் கர்வம், கொண்டிருந்ததை அறிந்த கண்ணபிரான்
பக்குவமாக மூவரது ஆணவத்தையும் நல்லறிவுண்டாக்கத் திருவுளம் கொண்டார். ஒருநாள், 'சத்தியபாமா தம் அருகில் இருக்கும் போது, மிகுந்த கவலையாய் இருப்பது போல முகத்தை திருப்பிக் கொண்டு கபட
நாடகம் நடித்தார். கண்ணபிரானது முகவாட்டத்தைக் கண்ட சத்தியபாமா 'சுவாமீ! நும்
திருவுளத்தில் ஏதோ ஓர் பெரிய-துக்கம் அடைதுளதாகத் தோன்றுகின்றது உம்மது - உவாமதி
நேர்முகம் சாம்பியுற்றது. எதனால் இது நேரிட்டது என்பதை அடியாள் தெரியும் வண்ணம்
கூறியருள வேண்டும்' என்று கேட்டாள்.
கண்ணபிரான் - எனது அன்புக்குரிய சத்தியபாமா எனது கவலைக்குக் காரணம் ஒரே ஒரு ஆசைதான். மிக நல்லவனான ஒரு பக்தன், எனக்கு உண்டு. என்னை காண வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.
சத்தியபாமா- சுவாமீ! தாங்கள் தங்களது பக்தன் ஒருவனைக் காண
விரும்பினால் அவனை இங்கு வரவழைக்கலாம் அல்லது நாம் அவன் இருக்கும் இடம் சென்று காணலாம். இதைச் செய்யாமல் தாங்கள் கவலை அடைவது விநோதமாக இருக்கின்றது. தங்களது அந்தப் பக்தனது பெயர் யாது? அவன் எங்கே இருக்கின்றான்?
கண்ணன் - அவன் பெயர் அனுமன், இருக்குமிடம் கந்தமாதன பருவதத்தின் உச்சி. அவனுடைய உதவியால்தான் முன்பு இராமாவதாரத்தில் நான், இராவணனைச் சம்மாரம் செய்தேன் அவனுக்கு ஒரு விரதம் உண்டு, இராமர், சீதை ஆகிய இருவரை அன்றி யாவரையும் வணங்கமாட்டான். இராமரது உத்தரவுப்படிதான் எதையும் செய்வான். மற்ற யாவர் சொல்லையும் பொருட்படுத்தமாட்டான்.
நான் அவனைக் காண விரும்பினால், நான் இராமராக வடிவெடுக்க வேண்டும், இராமர் வடிவு எடுக்க என்னால் முடியும், சீதையாக வடிவு எடுப்பவர் யார்? என்றுதான் கவலை. நீயோ, ருக்மணியோ, யாரும் சீதையாக வடிவெடுக்க முடியாது என்னும் உறுதியான எண்ணம்
என்றும் எனக்கு உண்டு.
சத்யபாமா சுவாமி! கவலையை விடுங்கள் நான் சீதை வடிவெடுத்துக் கொண்டு உங்கள் பக்கத்தில் அமர்வேன். இப்போதே அந்த அனுமானை
அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள்.
பின்பு கண்ணபிரான் தம் திருவுள்ளத்தில் கருடனை நினைத்தார் உடனே கருடாழ்வார் சுவாமியிடம் வந்து வணங்கிப் “பெருமானே அடியேன் செய்யும் பணியைத் திருவாய் மலர்ந்தருள வேண்டும்” என்றார்.
கண்ணபிரான் 'இப்பொழுதே நீ கந்தமாதன பர்வதத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு நம்முடைய பக்தன் அனுமான் இருப்பான், அவனிடம் நீ ஒரு செய்தியைச் சொல்லி வர வேண்டும். ''துவாரகாபுரியில் இராமபிரானும் சீதாதேவியும் இருக்கின்றார்கள் அங்கு வரும்படி உத்தரவு. நீ உடனே புறப்பட்டு வருவாயாக” என்று சொல்லிவிட்டு அவன் இங்கு வந்து சேர்வதற்கு முன், நீ இங்கு வந்து அவன் வருகையை எனக்கு அறிவிக்க வேண்டும் சென்று வா' எனக் கருடனை அனுப்பிவிட்டுச் "சுதரிசனம்'' என்னும் பெயருடைய சக்கரத்தாழ்வானைத் தம்மிடம் வரச்செய்து அதற்கும் ஒரு பணியைத் தருகிறார் 'சக்கராயுதமே! நீ நம் அரண்மனை முன்வாயிலுக்குச் செல். அங்குள்ள துவார பாலகர்களை வேறு வேலைக்குப் போகச் சொல்லிவிட்டு வாயிற் காவலளாக நீ இருக்க வேண்டும், சிறிது நேரத்தில் அனுமான் வருவான், அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, நீ, நம்மிடம் வந்து அனுமான் வருகையை அறிவித்துவிட்டுப் பின்பு முன்வாயிலுக்குப் போய் அவனை உள்ளே வரவிடு' என்று கூறி அனுப்பிவிட்டார்.
கந்தமாதனம் சென்ற கருடன், அங்கு இராமத் தியானத்தில் அமர்ந்திருந்த அனுமானைக் கண்டு இராமபிரான் சீதாதேவியாருடன் துவாரகையில் இருக்கின்றார். உன்னை அங்கு வரும்படி உத்தரவிட்டார் என்றது. ஆஞ்சனேயருக்கு வந்த மகிழ்ச்சியின் அளவை யாராலும் சொல்ல முடியாது. கருடனைக் கட்டித் தழுவி, இந்த ஆனந்தச் செய்தியைச் சொன்ன உனக்கு நான் செய்யும் கைமாறு எதுவுமே இல்லை. இதோ இந்தக் கனிகளை எல்லாம் சாப்பிடு, தேவாமிர்தம் போன்ற இந்தத் தீர்த்தத்தையும் சாப்பிடு, என அன்போடு உபசரித்தார் பின்பு கருடன் 'ஆஞ்சனேயா! புறப்படு நாம் இருவரும் துவாரகை செல்வோம்' என்றது, 'நீ செல், பின்னால் நான் வருகிறேன்' என்று கருடனை அனுப்பிவிட்டார் ஆஞ்சநேயர்.
பதுமாசனமிட்டு அமர்ந்தார்
ஆஞ்சநேயர் ராம் ராம் எனச் சிந்தித்தார். அடுத்த கணம் துவாரகை அரண்மனை வாயிலில்
இருந்தார். அங்கு காவலாயுள்ள சக்ராயுதத்தைப் பார்த்து 'எம்பெருமான்
எங்கிருக்கின்றார் சீக்கிரம் சொல்' என்றார். 'அனுமானே! அவசரப்பட
வேண்டாம், இங்கு உட்கார், உனது வரவைப் பிரானிடம் அறிவித்துவிட்டுப்
பின்பு வந்து உன்னை அவரிடம் அழைத்துப் போகின்றேன்' என்றது.
சக்கரத்தாழ்வார் சொன்ன சொற்களை ஒரு பொருளாகவே மதிக்காத ஆஞ்சநேயர் தமது இடது கையால் சக்கரத்தைப் பிடித்தார். அவ்வளவுதான், சக்கராயுதத்தின், ஆற்றல், வீரம், எல்லாம் அடங்கிப் போனது. பொன்னால் ஆன ஒரு கங்கணம் போல, ஜடப் பொருளாக மாறிவிட்டது. ஆஞ்சநேயர் அதைத் தமது வலது கையில் கோர்த்துக் கொண்டார். பின்பு அரண்மனைக்குள் செல்கின்றார்.
அரண்மனை முகப்பு வாயிலில் இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைக் கேட்டவுடன் கண்ணபிரான் ராமராக வடிவெடுத்துக் கொள்ள, சீதையாக வடிவெடுத்துக் கொள்வேன் என முன்பு கூறியிருந்த சத்தியபாமா சீதாதேவியின் வடிவு எடுக்க முடியாமல் அரண்மனைக்குள் அங்குமிங்கும் அலைகிறார். இதைக் கண்ட பெருமான் ருக்மணி தேவியைச் சீதைவடிவெடுத்துக்கொண்டு வருமாறு அருள் புரிகிறார். அப்படி வந்த சீதாதேவியைத் தன் பக்கத்தில் இருக்கச் செய்கிறார்.
அரண்மனையுள் புகுந்த ஆஞ்சநேயர், சீதாபிராட்டி சமேதராக இராமபிரான் எங்கேயுள்ளார் என்று தேடி வந்து ஜானகி ராமரைத் தெரிசிக்கிறார். சாஷ்டாங்கமாகக் கீழ்வீழ்ந்து வணங்குகிறார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது. எழுந்து தம் சிரசின் மேல் இருகரங்களையும் கூப்பி நின்று கொண்டு 'எம்பெருமானே! அடியேன், திருவடிகளுக்குச் செய்ய வேண்டிய, பணி இது எனத் திருவாய் மலர்ந்தருள வேண்டும். கணநேரத்தில் அதை முடித்துக் கொண்டு அடியேன் வர அருள வேண்டும்' என்று கூறுகின்றார்.
இராமபிரான் “எனது அன்புக்குரிய அனுமானே! நீ நன்றாகச் சௌக்கியமாக இருக்கின்றாயா?'' எனத் திருவாய் மலர்ந்தருளித் தம்முடைய செந்தாமரைக் கரத்தால் அனுமனை கையைப் பிடித்து இழுத்துத் தம் பக்கத்தில் அமர்த்திக் கொள்கிறார். அனுமாருடைய முதுகைத் தம் திருக்கரத்தால் பல தடவை
தடவிக் கொடுக்கிறார். சீதாபிராட்டியார், தேவாமிர்தத்தை விட மேலான பக்ஷணங்களை
ஆஞ்சநேயர் சாப்பிடக் கொடுக்கிறார். அந்த பிரசாதத்தை ஆர்வமுடன் அருந்துகிறார்
ஆஞ்சநேயர்.
பின்பு இராமபிரான் “ஆஞ்சநேயா! உன்னைப் பார்த்துப் பல
வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது உன்னைப் பார்க்க விரும்பித்தான் உன்னை இங்கு அழைத்தது, வேறு காரியம் எதுவும் இல்லை . நீ சுகமாக உனது இருப்பிடமாகிய கந்தமாதன பர்வதம் செல்வாயாக!' என விடை கொடுத்து அனுப்புகிறார். பிரியா விடை பெற்ற ஆஞ்சநேயர், அரண்மனையை விட்டு வெளியே வரும் போது, நமது கையில் கங்கணமாகக் கிடக்கும் சக்கராயுதத்தை, வாயில் காவலாக இருக்கும் படி முன்பு அது இருந்த இடத்திலேயே வைத்து விட்டுச் சென்றுவிடுகிறார்.
இப்போதுதான் கருடாழ்வார் கண்ணபிரானிடம் வந்து வணங்கி நிற்கிறார். கருடனைப் பார்த்துப் பெருமான் “என்ன? அனுமான் வருகின்றானா?” எனக் கேட்கிறார். மூக்கரையன் ஒருவனுக்குக் கண்ணாடியை முகத்துக்கு முன் காட்டுவது போலிருந்தது பெருமான் கேட்டது.
சத்தியபாமா, கருடன், சக்கராயுதம் ஆகிய மூவரும், தங்களது ஆணவத்தைப் போக்கக் கண்ணபிரான் செய்தது இந்தத் திருவிளையாடல் என்று நினைந்து அன்று முதல் சாந்தம், பணிவு, அடக்கம் முதலான நற்குணங்களுடன் வாழ்கின்றார்கள்.
கந்தமாதனம் சென்ற ஆஞ்சநேயர் முன்பு போல அங்கேயே இராமத் தியானம் செய்து கொண்டு, இக்காலத்தும் அங்கு வாழ்கின்றார்.
கண்ணன்விரும்பி ராமனுருக் காட்சி அளிக்கும் படி அவன்தன்
கருணைக்கிலக்காய் விளக்கி அகம் கவினும் மனத்துக் கருடன்ஒல்க நண்ணந்தர வீதியில் விரைவாய் நடந்துசுதரி சனப் படையை
நலம்சேர் கர புடணமாக்கி, நாடு முருக்குமணி சீதை
வண்ணம் பொலி கோலம் சமைந்து வழங்கும் உணவு புசித்துவக்கும்
மகிமை அநுமப் பெயர்ப் பெரியோன் வாழ்வெற்கமையைப்
பணிப்பாயோ?
எண்ணம் பொலி மெய்க் கவுமாரர் இனம்சேர் சிரவணப்பதியாய்
இராமனந்தப் பெயர்கொடென் திதயத் திலங்கும் பெருமாளே.
அடுத்த பதிவில் விபீடண கதி...
கொங்கு நாட்டுக் கச்சியப்பர் என்றழைக்கப்பட்ட சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம் அருள்திரு. கந்தசாமி சுவாமிகள் அருளிய பக்தமான்மியம்
இதில் 104 வைணவ அடியார்களின் சரித்திரம் உள்ளது. 7373 பாடல்கள். இந்தப் பக்தர்களின் அருள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களைச் சுருக்கமாக வசன நடையில் எழுதினால் அன்பர்கள் பலரும் படித்துப் பயன்பெற வாய்ப்பாக இருக்கும் என்னும் எண்ணத்தால் இது எழுதப் பெறுகிறது.
தவத்திரு தம்பி சுவாமிகள் (எ) மருதாசல சுவாமிகள்,
கௌமார மடாலயம் (கெளமார அமுதம் மாதாந்திர இதழில் வெளிவந்த
கட்டுரைகளின் தொகுப்பு)
Tuesday, July 9, 2019
நாபதாசர் கதி | தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் அருளிய பக்தமான்மியம் | 104 வைணவ அடியார்களின் சரித்திரம்
வைணவ அடியார்களின் அருள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்கள் சுருக்கமாக வசன நடையில்...
நாபதாசர்
மேனாடு என்னும் நாட்டை ஆட்சி செய்யும் அரசர் மானசிங்கர். கல்வி கேள்விகளில் சிறந்தவர். நல்ல பண்புகளும் நிறைந்தவர். நல்ல சற்குரு ஒருவரை அடைந்து அவரது அனுக்கிரகத்தால் ஞானம் பெறவேண்டும் என்ற பெருவிருப்புள்ளவராகிச் சற்குருவின் வரவை எதிர்பார்த்திருக்கின்றார்.
நாராயணக் கடவுளின் திருவருட் செல்வம் பெற்ற சீலம் மிக்க 'கிருட்டிணதாசர்' என்னும் பெரியவர் தனது மாணவர்களாகிய 'அக்கிரன்' 'கீல்கன்' என்னும் இருவர்களோடு மானசிங்க அரசரின் நாட்டுக்கு வந்து, அரசரைச் சந்திக்கின்றார். அருளாளராகிய கிருட்டிணதாசரைக் கண்ட அரசர், மிக மகிழ்ச்சி அடைந்தவராகி அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப், 'பெருமானே தாங்கள் இங்கேயே என் நாட்டிலேயே தங்கி எளியேனை ஆட்கொண்டருளத் திருவுளம் கொள்ள வேண்டும்' என மீண்டும் அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறார். அவரது பேரன்பையும் பணிவையும் கண்ட கிருட்டிணதாசர் உன் விருப்பப்படியே ஆகட்டும் என்று அருளாசி வழங்கினார்.
மானசிங்கர் தனது அரண்மனைக்கு மேற்குத் திசையில், ஒரு ஆசிரமம் அமைத்து; அதில் கிருட்டிணதாசரும் அவரது மாணவர்களும் தங்கி வாழும் படிச் செய்து, தினந்தோறும் ஆசிரமத்துக்குச் சென்று கிருட்டிணதாசரை வணங்கிப் போற்றி அவரது உபதேச மொழிகளை ஏற்று அருட்செல்வத்தை அடைந்து கொண்டிருக்கின்றார். குருநாதராகிய கிருட்டிணதாசரது வேள்வி, பூசனைக்கு வேண்டிய தர்ப்ப , சமித்து, மலர், பாத்திரம், முதலியனவற்றைக் கீல்கன், அக்கிரன் ஆகிய இருவரும் காட்டுக்குள் சென்று தினமும் கொண்டு வருவார்கள். அப்படி ஒருநாள் வரும் பொழுது வழியில் இளவயதுள்ள ஒரு பாலகன் மயங்கிய நிலையில் கிடக்கின்றான். அவனைப் பார்த்த கீல்காக்கிரர்கள் தண்ணீர் கொண்டு வந்து அவன் முகத்தில் தெளித்து, மயக்கம் நீங்கச் செய்து அவனைத் தம்முடன் அழைத்துக் கொண்டு, ஆசிரமம் வந்து சேர்கிறார்கள். அவனைத் தம் குருநாதரிடம் அழைத்துச் சென்று விவரத்தைக் கூறுகின்றார்கள்.
கிருட்டிணதாசர் சிறிது நேரம் தம்
விழிகளை மூடிய நிலையில் இருந்து அந்தப் பாலகனுடைய தன்மைகளைச் சிந்தித்து அறிந்து
சொல்கின்றார். இவன் பிற்காலத்தில் பக்தியிற் சிறந்த சித்தருகனாவான். இவனை நம்
ஆசிரம முகப்பில் இருக்கச் செய்து, வரும் அடியவர்களை வரவேற்கச் செய்யுங்கள். இங்கு வந்து செல்லும் அடியார்களின் பாதம் அலம்பும் தீர்த்தத்தைப் பிடித்து வைத்துக் கொண்டு,
அதனையே இவர் குடிக்கவும் குளிக்கவும் செய்யுங்கள். அடியவர்கள் அமுதருந்திய மிச்சில் பிரசாதத்தை இவன் உண்ணக் கொடுங்கள் என்று உத்தரவிட்டு,
அவனுக்கு 'நாபதாசன்' எனப்
பெயரிட்டு அனுப்பினார்.
'கண்ணுறல் பக்தர்சேவை காதுறல் அவர்சொல் வார்த்தை
பண்ணுதல் அவர் நல் ஏவல்
படிதல் பாதோத கத்தில்
உண்ணுதல் அவர்தம் சேடம்
உயிர்த்தல் அன்னவர் மெய்க்காற்றே நண்ணுறும் நாபதாசன் நற்றவம் பெற்றார் யாரே?'
இவ்வாறு பல நாட்கள் பக்த சேவை செய்து கொண்டிருந்தார் நாபதாசர். இவருடைய நல்ல பக்குவத்தை அறித்த அக்கிரதாசர் இவருக்குத் தாரக மந்திரோபதேசம் செய்தருளினார். உபதேசம் பெற்ற நாமதாசர், இரவு பகலாக அந்த மந்திரத்தைச் செபித்துக் கொண்டு தம் குருநாதரான அக்கிரதாசருக்குப் பணிவிடை செய்து கொண்டும் இருக்கின்றார்.
ஒருநாள் அக்கிரதாசர் தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து நாராயணக் கடவுளைத் தியானம் செய்து கொண்டிருக்க, அவருக்குப் பக்கத்தில் நாபதாசர் நின்று கொண்டு சாமரை வீசிக் கொண்டிருக்கின்றார். நெடுநேரம் குருநாதர் தியானத்தில் லயித்திருந்தார்.
இந்த அக்கிரதாசருக்கு ஒரு தனவணிகர் மாணவனாக இருந்தார். பெரிய கப்பல் வியாபாரி. குருநாதரையே கடவுளாகச் கருதிப் பூசிப்பவர். கப்பல் நிறையப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வேறு ஒரு நாட்டுக்கு வியாபார நிமித்தமாக சென்று கொண்டிருக்கையில், புயலால் கடல் கொந்தளிப்புக் கொண்டது. கப்பல் கவிழ்ந்து விடுமோ என அனைவரும் அஞ்சும் நிலைமை ஏற்பட்டது. அந்தத் தனவணிகர் தமது கடவுளாகிய அக்கிரதாசரை நினைந்து மனம் உருகித் தோத்தரித்துக் கப்பல் மூழ்கி விடாது திருவருள் செய்ய வேண்டுகின்றார். எல்லாம் வல்ல நாராயணக் கடவுளின் திருவருளால் கடல் கொந்தளிப்பு நீங்கி அமைதி உண்டாகிக் கப்பல் நல்ல நிலைக்கு வருகின்றது.
தியானத்திலிருந்த அக்கிரதாசர் அந்த
நிலை நீங்கிச் சகநிலைக்கு வருகின்றார். நாமதாசர் அவருடைய திருவடிகளில் வீழ்ந்து
வணங்கி எழுந்து, கப்பல் அபாய நிலையைக் கடந்து விட்டது, சேமமாகச்
செல்கின்றது என்றார். தமது ஞான திருஷ்டியால் எல்லாம் தெரிந்து கொண்டுள்ள குருநாதர்,
மிக மிக மகிழ்ந்து நாபதாசரைத் தழுவிக் கொள்கிறார்.
பின்பு ஒருநாள் அக்கிரதாசர் தமது மாணவராகிய நாமதாசரைப் பார்த்து 'முற்காலத்தில் இருந்த அரிதாசர்கள் வரலாற்றையும், இக்காலத்துள்ளவர் கதைகளையும், இனி வருங்காலத்தில் தோன்றித் திருவிளையாடல் செய்யும் பக்தர்களின், சரித்திரங்களையும் பக்த கதையாகப் பாடிவைப்பாயாக மானிடர்கள் அதைச் சிரவணம் செய்து அருட்செல்வத்தை அடைந்து உய்தி பெறுவார்களாக' எனக் கூறியருளுகிறார். நாமதாசர் தமது குருநாதரை வணங்கி எழுந்து, பெருமானே ஒன்றும் அறியாச் சிறியேன் மூன்று காலங்களிலும் இருந்த, இருக்கின்ற, இருக்கும் பக்தர்களின் கதைகளை எவ்வாறு சொல்ல முடியும் என்று கூறினார்.
அக்கிரதாசர் அருளிச் செய்கின்றார். 'அலைவீசும் நடுக்கடலில் கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு, பின்பு அது நீங்கி, நல்ல வண்ணமாகச் செல்வதை, எவ்வாறு
சொன்னாயோ அது போலத்தான் பக்தர்கள் கதைகளையும் உன்னால் சொல்ல முடியும் உடனே எழுதத் தொடங்கு' என ஆசி கூறி அனுப்புகிறார். பின்பு நாமதாசர் தனது ஞான திருஷ்டியால் பக்தர்கள் வரலாற்றை அறிந்து, 'பக்த கதா'
என்னும் பெரிய காவியம் ஒன்றைச் செய்தருளுகிறார். அக்காவியம் வடநாட்டில் இன்றும் விளங்குகிறது. இங்கு தமிழ் நாட்டில் 'பக்த விஜயம்' என்னும் வசன நடையில் உள்ளது. நாமதாசருக்கு 'நாபாஜி சித்தர்' என்னும் பெயர் அதில் காணப்படுகிறது.
கிருட்டிணப்பேர்த் தேசிகன்தாள் கிட்டி வணங்கும் அக்கிரனும்
கீல்கன் தானும்
கண்டுவப்பால் கிளர்கண் விளங்கப் புரிந்து ஒருதம்
குருப்பால் உரைத்துய்த்திட
அவன்வாய் கூறும் நாபப் பெயர்சூடிக்
குறையா மகிமை அக்கிரனைக்
குருவாக்கொண்டு பணிபுரிகால்
இருட்கார் ஆழிஇடைக்கலம்
ஆழ். இன்னல் அகன்றே நெடுந்தூரம்
ஏகும் விவரம் தெரிந்துரைத்த இணைதீர் நாப தாசர் என
இருக்கமுடிவோர்
பத்தர்புகழ் எல்லாம் சொலும்சீர் எனக்கருள்வாய்
இராமானந்தப் பெயர் கொடெனது
இதயத் திலங்கும் பெருமாளே.
அடுத்த பதிவில் அனுமார் கதி...
கொங்கு நாட்டுக் கச்சியப்பர் என்றழைக்கப்பட்ட சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம் அருள்திரு. கந்தசாமி சுவாமிகள் அருளிய பக்தமான்மியம்
இதில் 104 வைணவ அடியார்களின் சரித்திரம் உள்ளது. 7373 பாடல்கள். இந்தப் பக்தர்களின் அருள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களைச் சுருக்கமாக வசன நடையில் எழுதினால் அன்பர்கள் பலரும் படித்துப் பயன்பெற வாய்ப்பாக இருக்கும் என்னும் எண்ணத்தால் இது எழுதப் பெறுகிறது.
தவத்திரு தம்பி சுவாமிகள் (எ) மருதாசல சுவாமிகள்,
கௌமார மடாலயம் (கெளமார அமுதம் மாதாந்திர இதழில் வெளிவந்த
கட்டுரைகளின் தொகுப்பு)
Thursday, June 13, 2019
Subscribe to:
Posts (Atom)
-
# சித்திரத்_தேர் # கௌமார_மடாலயம் , தண்டபாணிக் கடவுள் திருக்கோயில்த் தேர் பற்றிய வரலாற்றுச் சுருக்கம்... ☀️ நமது # சிரவணபுரம் கௌமார ம...