#இலங்கை_ஆன்மீகச்_சுற்றுப்பயணம் நான்காம் நாளான நேற்று நமது சிரவை ஆதீன குருமகா சன்னிதானங்கள், தமிழகத்தைச் சேர்ந்த 27 அன்பர்களுடன், திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீரூற்று, மாத்தலை முத்துமாரியம்மன் கோயில் மேலும் சில திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடுகள் மேற்கொண்டார்கள்...
இலங்கையில் ஒரு சிறந்த ஆன்மீகத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் திருக்கோணமலை மாவட்டம் திகழ்கிறது. இந்த இடத்தைச் சுற்றி இருக்கும் முக்கிய இடங்களைக் காண்போம்..
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். இந்த ஆலயத்தில் ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெறுகின்றன. மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது. இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
திருகோணமலை கோட்டை என்றும் பிரெட்ரிக் கோட்டை என்றும் அழைக்கப்படும் இக்கோட்டை திருகோணமலை நகரின் வடக்கே அமைந்துள்ளது. இந்தக் கோட்டை போர்த்துக்கீசரால் கட்டப்பட்டது. பின்னர் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இந்தக் கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது. தற்போது இலங்கை இராணுவதின் பலமான முகாமாக விளங்குகின்றது. தற்போது இங்கு கட்டுப்பாடுகள் இன்றி சென்று வர முடியும். திருக்கோணேச்சரத்துக்குப் போகும் பாதையும் கோட்டைக்குப் போகும் பாதையும் ஒன்றாகும். சுற்றுலா பயணிகளின் பார்வையை இது மிகவும் கவர்ந்து வருகிறது.
இலங்கையின் நுவாரா எலியாவில் அமைந்துள்ளது இந்த லவ்வர்ஸ் லீப் நீர்வீழ்ச்சி. இயற்கை வளம் கொழிக்கும் இந்த அழகிய நீர்வீழ்ச்சியை காண இங்கு பல லட்ச சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். இயற்கை விரும்பிகளின் தாயகமாகவும் இந்த இடம் அமைந்துள்ளது. நீண்ட நெடிய மலையின் உச்சியில் இருந்து அருவி விழும் அழகினை காண மனம் சல்லாபம் கொள்ளும் என்பதில் ஐயமேதுமில்லை. இந்த இடத்தில் டிரக்கிங் செல்வது மேலும், சிறப்பான அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு தருகின்றது.
திருகோணமலையில் அமைந்துள்ள இந்த ஹூட்ஸ் கோபுர அருங்காட்சியகம் இலங்கை கடற்படையினரின் அருங்காட்சியகமாகும். திருகோணமலைத் தீபகற்பத்தின் உயரமான ஓஸ்டன்பெர்க்கில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த பகுதியை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த சார் சாமுவேல் ஹூட்ஸ் என்பவரின் நினைவாக இந்த அருங்காட்சியகத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1795-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவத்திடம் இந்த கோட்டை சரணடைந்தது. துப்பாக்கி துளைக்காத கோட்டை என்றும், பீரங்கிகள் தாங்கிய சக்தி வாய்ந்த கோட்டை என்றும் புகழ்பெற்ற ஓஸ்டன்பெர்க் கோட்டையின் நினைவு எச்சங்களே தற்போது அருங்காட்சியகமாக காட்சியளிக்கின்றது.
வெல்கம் வெஹரா என்றும் வில்கம் ராஜமகா விஹாரம் என்றும் அழைக்கப்படுகிறது இந்த வலராற்று சிறப்புமிக்க புத்த ஆலயம். இது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்து மதத்தினர் வணங்கும் நதனார் ஆலயமாகவும் இது கருதப்படுகிறது. இலங்கை தொல்லியல் துறை இந்த கோயிலை பராமரித்து வருகிறது. இந்த ஆலயம் கி.மு 267-307 கட்டப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. இதனை ராஜா தேவனாம்பியதிசர் கட்டியதாகவும், வலராறுகள் கூறப்படுகின்றது. உள்நாட்டு போரின் போது பல முறை இந்த புத்த ஆலயம் தாக்கப்பட்டதில் ஆலயம் சிதிலமடைந்து சில எச்சங்களே மிஞ்சி உள்ளன. இதனைக் காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல நூற்றாண்டு பொக்கிஷ நினைவலைகள் காத்துக்கிடக்கின்றது.
திருகோணமலை துறைமுகம் என்றும் கொட்டியார் துறைமுகம் என்றும் அழைக்கப்படுகின்றது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இந்த துறைமுகம். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இந்த துறைமுகத்தில் உலகின் பல்வேறு நாட்டு கப்பல்கள் வந்து செல்லும். இங்கு வாணிபம் மிகச் சிறந்த முறையில் அரங்கேறி வருகிறது. இயற்கை வளம் மிக்க இலங்கையில் துறைமுகத் தொழில் எந்த ஒரு சுனக்கமும் இன்றி வளம் கொழிக்கும் தன்மையுடனே நடந்து வருகிறது.
திருகோணமலை நகரின் மையப்பகுதியில், பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையிலும் திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது இந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் காலம் வரையறுத்துக் கூறமுடியாத அளவிற்கு தொன்மை சிறப்பு வாய்ந்துள்ளது. கர்ண பரம்பரையை சேர்ந்த தொடர்புடையதாய் இருக்கும் என கல்வெட்டுகள் வரலாற்று கதைகளை சொல்லி வருகின்றன. முதலாம் ராஜேந்திர சோழன் காலமாகிய பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்றிருந்திருக்க வேண்டுமென்று சரித்திரப் பேராசிரியர் குணசிங்கம் குறிப்பிட்டுள்ளார். பங்குனி உத்தரத் திருவிழா இந்த ஆலயத்தில் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். மேலும், வைகாசிப் பொங்கல், கேதாரகெளரி விரதம் போன்றவை ஆலயத்தின் சிறப்பு பூஜைகள் அரங்கேறும் நாட்களாகும். இந்த நாட்களில் பக்தர்கள் பெருமளவில் கூடி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இலங்கையின் மிகவும் பிரபலமான கிணறு இந்த கன்னியா வெந்நீரூற்று கிணறு. முந்தைய காலத்தில் அதிக வெப்பம் இருந்ததாகவும் இங்கு சுடச்சுட தண்ணீர் சுரந்ததாகவும் புராண வலராறு பேசப்பட்டு வருகிறது. இங்குள்ள 7 கிணறுகளும் சதுர வடிவமைப்பைக் கொண்டுள்ளன. மேலும், இவை 3-4 அடி ஆழமே இருப்பதால் இதன் அடியை எளிதில் காண முடியும். 10-15 வாளி அளவே இதில் தண்ணீர் எடுக்க முடியும். ராமாயண இதிகாசத்தில் ராவண காலக்கட்டத்தில் இந்த வெந்நீரூற்று இருந்ததாக புராண கால குறிப்புகள் இருப்பதே இந்த இடத்திற்கு பெரும் சிறப்பாக இன்றளவும் திகழ்கிறது. இந்த இடமும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.